பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு கருத்து

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2019      இந்தியா
Venkaiah naidu 2019 08 07

 மும்பை : பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். 
புனேயில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது, உன்னாவ் கற்பழிப்பு சம்பவத்தில் பெண் தீ வைத்து எரிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மற்றும் ஐதராபாத்தில்

பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவங்களை குறிப்பிட்டு பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது:-

இந்திய கலாசாரத்தில் நாம் ஒவ்வொரு பெண்களையும் தாயாகவும், சகோதரியாகவும் கருதுகிறோம். சமீபத்திய நாட்களில் நடந்த சம்பவங்கள் உண்மையில் வெட்கக்கேடானது. இது நம் அனைவருக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவால். இந்த வகையான அட்டூழியங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு நாம் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.

நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் என்ன நடந்தது? பிரச்சினை தீர்க்கப்பட்டதா? நான் எந்தவொரு மசோதாவிற்கும் அல்லது புதிய சட்டத்திற்கும் எதிரானவன் அல்ல. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் கொண்டு வருவது மட்டும் தீர்வு அல்ல. இதுபோன்ற சமூக தீமைகளை கொல்வதற்கு அரசியல் ஆர்வம், உறுதிப்பாடு மற்றும் நிர்வாக திறன்கள் தேவைப்படுகிறது.

மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை. நாம் மீண்டும் நமது கலாசாரத்திற்கு திரும்ப வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நாட்டுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்துகின்றன. குற்றங்களின் தலைநகராக இந்தியா மாறி வருவதாக சிலர் பேசுகின்றனர். நாட்டை யாரும் இழிவுபடுத்தக்கூடாது. இந்த சம்பவங்களை அரசியல் ஆக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து