முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்குச் செல்லும் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட முடியாது - பிந்து, திருப்தி தேசாய் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி: சபரிமலை கோவிலில் தரிசனத்துக்கு செல்லும் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட முடியாது என்று பிந்து, திருப்தி தேசாய் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஐயப்பன் கோவிலின் ஐதீகம் என்று கருதப்பட்ட இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த கோர்ட்டு கடந்த ஆண்டு அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. கடந்த மாதம் சீராய்வு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த இறுதி முடிவை எடுக்க 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. அதே நேரம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் இல்லை என்றும் கூறியது.

கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிய கேரள போலீசார் இந்த ஆண்டு சபரிமலை வந்த பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று மறுத்து விட்டனர். புனேவை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் திருப்திதேசாய் வந்த போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி போலீசார் திருப்பி அனுப்பினர்.

திருப்திதேசாயுடன் வந்த கேரள பெண் பிந்து அம்மணி கொச்சி போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க வந்த போது பக்தர்கள் அவரை வழி மறித்து மிளகாய் பொடி ஸ்பிரே அடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பிரச்சனை குறித்து பிந்து அம்மணி சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல் செய்தார். அதில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமலில் இருக்கிறது. ஆனால் கேரளா போலீசார் சபரிமலை செல்ல எங்களை அனுமதிக்காததோடு பாதுகாப்பு வழங்கவும் மறுக்கிறார்கள்.  எனவே கேரள போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

இது போல மாடல் அழகியும், பெண் சமூக ஆர்வலருமான ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுத்திருந்தார். இந்த மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் ரஹானா பாத்திமா, பிந்து அம்மணி ஆகியோரின் வக்கீல்கள் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி இது தொடர்பான உத்தரவை விரைவில் பிறப்பிப்பதாக அறிவித்தார். அதன்படி, பெண்கள் இருவரின் மனுக்களும் நேற்று தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சபரிமலைக்குச் செல்லும் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி போலீசாருக்கு உத்தரவிட முடியாது. அதேசமயம், பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு இருந்தாலும், இது உணர்வுப்பூர்வமானது, சபரிமலையில் எந்தவிதமான வன்முறையும் நடக்க நாங்கள் விரும்பவில்லை, சூழ்நிலையைக் கொந்தளிப்பாக மாற்றவும் நாங்கள் விரும்பவில்லை. சீராய்வு மனுக்களை விசாரிக்க 7 பேர் கொண்ட அமர்வு அமைக்கப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த அமர்வு உருவாக்கப்பட்டு விசாரணை தொடங்கும். ஆதலால், மனுதாரர்கள் உத்தரவை ஏற்று எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்க இயலாது. அதேசமயம், மனுதாரர்களான பிந்து அம்மணி, திருப்தி தேசாய் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே சமயம், 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கும் தடையில்லை. இது சமமான உண்மை என்ற போதிலும் அதுவே இறுதியானது அல்ல. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து