ரஜினிகாந்த் என்னை தூண்டவில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2019      சினிமா
Rajinikanth-Raghava-Lawrence 2019 12 22

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் என்னை தூண்டி விடவில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சி மீதும் அதன் தலைவர் சீமான் மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

நான் பதிவிடும் டுவீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப் போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே. என்னுடைய கருத்துகளுக்கு ரஜினிகாந்த் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினி சொல்லித்தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டி விட்டு பேச வைக்க கூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது மட்டுமே.

நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் யாரையும் ஆதரிக்கவில்லை. நான் எனது சேவையைச் செய்கிறேன். தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன். உதவி செய்தால் நன்றியைத் தெரிவிப்பேன். எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன். இதன் காரணமாக எனக்கும், மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு நான் சாந்தமாக பதிலளிப்பேன். ஜல்லிக்கட்டு சமயத்திலிருந்தே நான் சாந்தமாகவே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு சாந்தமாக புரியவைக்க முயற்சிப்பேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து