நாட்டுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினால் ஜெயில் தண்டனை - அமித்ஷா எச்சரிக்கை

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2020      இந்தியா
Amit Shah 2020 01 13

போபால் : நாட்டுக்கு எதிராக தேச விரோத கோ‌ஷங்களை யார் எழுப்பினாலும் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜனதா சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் தங்களால் முடிந்த வரை எதிர்ப்பு தெரிவிக்கட்டும். ஆனால் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக குடியேறிய சிறுபான்மை சமூகத்தினர் அனைவருக்கும் இந்திய குடியுரிமை அளித்த பிறகே ஒய்வு எடுப்போம். இதை யாராலும் தடுக்க முடியாது.

இந்தியாவில் நமக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவுக்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இந்த தேசம் அவர்களை அரவணைக்கும்.

குடியுரிமை திருத்த சட்டத்தால், முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்று ராகுல் காந்தி, மம்தாபானர்ஜி. கெஜ்ரிவால், இடதுசாரி கட்சியினர் உள்ளிட்டோர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அந்த சட்டத்தில் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான பிரிவு ஏதேனும் இருப்பதாக காட்ட முடியுமா? என்று அவர்களுக்கு மீண்டும் சவால் விடுக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தில் மக்களின் குடியுரிமையை பறிக்கும் எதுவும் இல்லை. உண்மையில் குடியுரிமை வழங்குவதற்காகவே அந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில இளைஞர்கள் தேச விரோத கோ‌ஷங்களை எழுப்புகின்றனர். அவர்களை சிறையில் அடைக்க வேண்டாமா? நாட்டுக்கு எதிராக தேச விரோத கோ‌ஷங்களை யார் எழுப்பினாலும் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்.

அவர்களை காப்பாற்றுங்கள் என்று ராகுலும், கெஜ்ரிவாலும் கூறுகிறார்கள். அவர்கள் என்ன உங்கள் சகோதரர்களா? இவ்வாறு அமித்ஷா பேசினார்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து