முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டி20 போட்டி: 4 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது அயர்லாந்து

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 போட்டியின் கடைசி கட்டத்தில் அயர்லாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் ஆடினர். கெவின் ஓ பிரையன் 48 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த பால் ஸ்டிர்லிங், 47 பந்தில் 8 சிக்சர், 6 பவுண்டரியுடன் 95 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய வீரர்கள்நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.வெஸ்ட் இண்டீஸ் சார்பில் காட்ரெல், பியர்ரி, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எவின் லெவிஸ் மட்டும் அரை சதமடித்தார். அவர் 29 பந்தில் 53 ரன் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இறுதி ஓவரில் வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் விக்கெட் வீழ்ந்தது. 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் பிராவோ. 3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் பிராவோ. 4-வது பந்தில் ரன் எதுவும் இல்லை. 5-வது பந்தில் பிராவோ கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பால் ஸ்டிர்லிங் தேர்வு செய்யப்பட்டார். அயர்லாந்து சார்பில் ஜோஷ்வா லிட்டில் 3 விக்கெட்டும்,  கிரெய்க் யங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, டி20 தொடரில் அயர்லாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து