முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை

சனிக்கிழமை, 18 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறக் கோரியும், நகரங்களில் வசிக்கும் மக்களை சந்தித்து விட்டுத் திரும்பி விடாமல், கிராமங்களுக்கும் சென்று அடித்தட்டு மக்களை சந்தித்துப் பேசி திட்டங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின் மத்திய அரசின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூற 38 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு ஜம்மு காஷ்மீர் சென்று வரும் 24-ம் தேதி வரை பல்வேறு நகரங்களுக்கும், கடைக்கோடி கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்திக்க உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள இருக்கும் மத்திய அமைச்சர்கள் 38 பேருடன் பிரதமர் மோடி  ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மக்களைச் சந்திக்கும்போது எடுத்துக் கூற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக மத்திய அரசு வடிவமைத்துள்ள, அறிமுகப்படுத்தியுள்ள அனைத்துத் திட்டங்கள் குறித்தும் மக்களுக்குக் கூறவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ரேசாய் மாவட்டத்தில் உள்ள கத்தாரா முதல் பந்தால் வரை வரும் 19-ம் தேதி முதல் பயணம் மேற்கொள்கிறார். ஸ்ரீநகர் முழுவதும் பியூஷ் கோயல் பயணித்து மக்களைச் சந்திக்கிறார். உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி 22-ம் தேதி முதல் கந்தர்பால், மணிகாம் வரையிலும், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 24-ம் தேதி பாரமுல்லா மாவட்டத்திலும் பயணம் மேற்கொள்கிறார். வரும் 20-ம் தேதி உதம்பூரில் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும், 21-ம் தேதி ஜம்முவில் கிரண் ரிஜ்ஜுவும் பயணிக்கின்றனர். தோடா மாவட்டத்துக்கு மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், ஸ்ரீநகரில் ஸ்ரீபட் நாயக்கும் செல்கின்றனர்.இவர்கள் தவிர மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், கிரிராஜ் சிங், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் பொக்ரியால், ஜிதேந்திரசிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளனர். அமைச்சர்கள் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் அனைத்து நிர்வாகிகள், செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து