பிரீமியர் பாட்மிண்டன் லீக் சென்னையில் இன்று தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      விளையாட்டு
Badminton League 2020 01 19

சென்னை : உலகின் சிறந்த பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பிரீமியர் பாட்மிண்டன் லீக்கின்(பி.பி.எல்) 5-வது சீசன் போட்டிசென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று (20-ம் தேதி)தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 9-ம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் லக்னோ, ஐதராபாத் நகரங்களிலும் நடைபெறுகிறது.

ரூ. 6 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்த தொடரில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராப்டர்ஸ், முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ் ஆகிய அணிகளுடன் அவாதே வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், வட கிழக்கு வாரியர்ஸ், புனே 7 ஏசஸ்ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடருக்கான கோப்பை அறிமுக விழா சென்னையில்  நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான பி.சாய் பிரணீத், லக்சயா சென், சாட்விக் சாய்ராஜ், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற டென்மார்க் வீராங்கனை கிறிஸ்டினா பெடர்சென், தாய்லாந்து வீரர் தனோங்சாக் சேன்சம்பூன்சுக், பி.பி.எல். 5-வது சீசனின் இளம் வீரரான 15 வயதான எஸ்.சங்கர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பி.பி.எல். 5-வது சீசன் முதற்கட்டஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியானது பி.வி.சிந்துவை உள்ளடக்கிய ஐதராபாத் ஹன்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. 21-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் வட கிழக்கு வாரியர்ஸ் - பெங்களூரு ராப்டர்ஸ் அணிகளும், 22-ம்தேதி சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் - மும்பை ராக்கெட்ஸ் அணிகளும், 23-ம் தேதி வடகிழக்கு வாரியர்ஸ் - அவாதே வாரியர்ஸ் அணிகளும், 24-ம் தேதி சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் - பெங்களூரு ராப்டர்ஸ் அணிகளும் மோதுகின்றன. சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் இம்முறை ஆடவர் ஒற்றையர் பிரிவில் டாமி சுகிர்தோ (இந்தோனேஷியா), லக்சயா சென், சங்கர் முத்துசாமி, சதீஷ் குமார் (இந்தியா) ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோர், இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் ஆகியோரும் களமிறங்க உள்ளனர். அதே வேளையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ், சுமித் ரெட்டி, மனு அட்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் இங்கிலாந்தின் கேப்ரியல் அட்காக், இந்தியாவின் சஞ்சனா சந்தோஷ் களமிறங்க உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து