முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் : ஜெயலலிதா பிறந்தநாளை ஆண்டு முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவோம் : அம்மா பேரவை கூட்டத்தில் தீர்மானம்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஜெயலலிதாவின் 72 - வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட ஜெயலலிதா பேரவை முடிவு செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 - வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஜெயலலிதா பேரவை சார்பில் நேற்று அதி.மு.க. தலைமை கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். முதலமைச்சரும், அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கி பேசினார்கள்.

கூட்டத்திற்கு அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கடம்பூர் ராஜூ, தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பி. ரவீந்திரநாத்குமார் எம்.பி., சேலம் மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோவன் மற்றும் கே.தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ., என்.சதன் பிரபாகர் எம்.எல்.ஏ., பா.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பேரவை நிர்வாகிகள் டாக்டர் ஜெயவர்த்தன், பெரும்பாக்கம் ஏ.ராஜசேகர், கே.ஏ.கே.முகில், சி.பி. மூவேந்தன், கே.எஸ். சீனிவாசன் மற்றும் பலர் வரவேற்று பேசினார்கள்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.காமராஜ், கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், இலக்கிய அணிச் செயலாளரும், தமிழ் நாடு பாடநூல் நிறுவன தலைவருமான பா.வளர்மதி, விவசாயப் பிரிவுச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் என்.ஆர். சிவபதி, அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மா. இளங்கோவன் நன்றி கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

இளைஞர் எழுச்சி நாள்

தாய்திருநாட்டு மக்களின் நலனும், உயர்வும், வளமும், மகிழ்ச்சியுமே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு ஏழை, எளியோருக்கும், தாய்மார்களுக்கும், பெண் குலத்திற்கும், மாணவ சமுதாயத்திற்கும், இளைய சமுதாயத்திற்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், பாமரருக்கும், படித்தவர்களுக்கும், பட்டம் பெற்றவர்களுக்கும், சாமானியருக்கும், உழைக்கும் மக்களுக்கும், சாதி, மத, இன வேறுபாடின்றி, அனைத்து மக்களின் நல்வாழ்விற்கு ஈடு இணையற்ற எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, இன்றைக்கு அன்னைத் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நீங்காது, முழுமதியாக இதய தெய்வமாக இடம் பிடித்திருக்கும் தமிழர்குலச்சாமி அம்மாவின் 72 - வது பிறந்த நாளை, இப்பூவுலகில் அவதரித்த திருநாளை ஆண்டுமுழுவதும் ‘‘இளைஞர் எழுச்சி நாளாக” கடைபிடித்திடுவோம்.

அன்னதானம், ரத்ததானம்

இப்புனித திருநாளை முன்னிட்டு, ஜெயலலிதா பேரவையின் சார்பில், ஏழை எளியோருக்கும், மாணவ மாணவியருக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், சாமானியர்களுக்கும் உதவி செய்கின்ற வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற விழாக்கள் பல நடத்திடவும், அன்னதானம், ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தான தர்மங்களை தமிழர்குலச்சாமி அம்மாவின் திருப்பெயரில் செய்திடவும், இளைஞர் சமுதாயத்திற்காக விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கு கோலப் போட்டிகள் மற்றும் வீர விளையாட்டுகள் பல நடத்திடவும் மேலும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மணமகன், மணமகளை தேர்வு செய்து, அம்மாவின் திருப்பெயரால் இலவச திருமணங்களை நடத்திடவும், ஓய்வறியாது, ஊன் உறக்கம் பாராது, தன்னுடைய அயராத உழைப்பால் கழகத்தை கட்டிக் காத்து கழகத்திற்கு உலகப் புகழை பெற்று தந்திட்ட நம் அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடியின் தலைமையிலும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.சின் தலைமையிலும் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டராக நாம் அனைவரும் நாளும் அயராது சோர்வில்லாமல் உழைத்து, அம்மாவின் புகழ் அகிலமெங்கும், ‘‘அழியா புகழாக”, ‘‘மங்கா புகழாக” நீடித்து நிலைத்து நிற்க, ஜெயலலிதா பேரவை உறுதி ஏற்கிறது. இவ்வாறு மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தையொட்டி தலைமைக் கழக வளாக நுழைவு வாயில் பழங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு பெரிய ரோஜாப் பூ மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. தலைமைக் கழக நுழைவு வாயல் முன்பு பெரிய ஜெயலலிதா படம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நிர்வாகிகள் ரோஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நுழைவு வாயல் முன்பு நின்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அனைவரையும் வரவேற்றார்.

 

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு பட்டு வேட்டி அணிவித்து அமைச்சர் வரவேற்றார். தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வரவேற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து