முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா அரசின் ஈடிணையில்லா தமிழ் வளர்ச்சி சாதனை திட்டங்கள் மீண்டும் மீண்டும் தொடரும்’’: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ‘‘அம்மா அரசின் ஈடு இணையில்லா தமிழ்வளர்ச்சி சாதனைத் திட்டங்கள் மீண்டும் மீண்டும் தொடரும். அது, வள்ளல் பாரி உவந்தளித்த தேரிலே, தொட்டுத் தொடர்ந்த முல்லையின் கொடியைப்போல், மக்கள் உள்ளங்களில் பற்றிப் படரும்’’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகிழ்ச்சியோடு கூறினார்.

நேற்று திருவள்ளுவர் தினம் விழா – தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது:–

திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் சிறப்பு சேர்த்து, புகழ் பரப்பவும், தமிழ் இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சென்று பெருமைப்படுத்தவும், தமிழுக்கு தொண்டு செய்து தமிழ் மொழியை அழியாது காத்து மென்மேலும் வளர்ச்சி காணவும் எண்ணற்ற திட்டங்களை, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அம்மா ஆகியோர் செயல்படுத்தினார்கள்.

தமிழ்ப் புலவர்கள் மத்தியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த திருவள்ளுவர் ஆண்டு” நடைமுறையை, அனைத்து அரசு ஆவணங்களிலும் அதிகாரப் பூர்வமாக பயன்படுத்திட வேண்டும் என்று 1981 ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் அறிவித்து, அரசாணை பிறப்பித்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

வள்ளுவப் பெருந்தகைக்கு சிறப்பு சேர்த்து, அவர் காட்டிய நெறிமுறையில் இலக்கியச் சிறப்பைக் கொண்ட தமிழ்ச் சான்றோரை, கௌரவப்படுத்திட முதன்முதலாக திருவள்ளுவர் விருதை ஏற்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

தமிழ் மொழி காக்கவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், அரும்பாடுபட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களது வழி நின்று, தஞ்சைத் தரணியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தி, மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் கண்டு, இன்னும் இதுபோல ஓராயிரம் திட்டங்களைத் தமிழ் வளர்ச்சிக்காகத் தந்து, கண் இமைகள், விழியைக் காப்பது போல் தன் செயல் திட்டங்களால் தமிழ் வளர்ச்சி காணச் செய்த தங்கத் தாரகை, புரட்சித் தலைவி அம்மா.

பிற மொழி பேசுபவர்களும் திருக்குறளின் சிறப்புகளை உணரவேண்டும்; வெளிநாடுகளுக்கும் வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் கருத்துக்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கோடு, உலக மற்றும் இந்திய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்திடச் செய்தவர் அம்மா.

அம்மா காட்டிய வழியில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித்தொகையை உயர்த்தி அளித்து, சிறந்த நூல்களை வெளியிடுவதற்காக நிதி உதவியை வழங்கி மாணவக் கண்மணிகளுக்கு வழங்கப்படுகின்ற பள்ளி, கல்லூரி மாணவர் இலக்கியப் போட்டிக்கான பரிசுத்தொகையை உயர்த்தி வழங்கி, தாய்மொழி நாள் விழாவைக் கொண்டாடச் செய்து, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை, அலை கடலுக்கு அப்பாலுள்ள அமெரிக்காவில் சிகாகோ மாநகரில் சிறப்புடன் நடத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அம்மாவின் அரசு தமிழ்ப்பணிக்கே தன்னை அர்ப்பணித்து சிறப்புடன், செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட அம்மா அரசு ரூ.1 கோடி அளித்துள்ளது.

அந்தத் தமிழ் உணர்வு ஒரு துளி அளவும் குறைந்திடாமல், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தன்னலமின்றி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் தொண்டு செய்யும் பெரியோர்களுக்கும், இன்று இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.

விருது பெறும் பெரியோர் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சிறந்த தமிழ் தொண்டு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

விருது பெற்றவர்கள் யார் – யார்?

திருவள்ளூவர் விருதுகள் மற்றும் தமிழ் புத்தாண்டு விருதுகளை நேற்று காலை கலைவாணர் அரங்கத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 2020ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது – ந. நித்தியானந்தபாரதி, 2019ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது – செஞ்சி ந. இராமச்சந்திரன், அண்ணல் அம்பேத்கர் விருது – க. அருச்சுனன், பேரறிஞர் அண்ணா விருது – கோ. சமரசம், பெருந்தலைவர் காமராசர் விருது – மா.சு.மதிவாணன், மகாகவி பாரதியார் விருது – ப.சிவராஜி, பாவேந்தர் பாரதிதாசன் விருது – த. தேனிசைசெல்லப்பா, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – சே.சுந்தரராசன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – மணிமேகலை கண்ணன் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்து கூறினார்.

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாக 2019–ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது – சிகாகோ தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது – வெற்றியழகன், உ.வே.சா விருது – வே. மகாதேவன், கம்பர் விருது – சரசுவதி இராமநாதன், சொல்லின் செல்வர் விருது – கவிதாசன், உமறுப்புலவர் விருது – லியாகத் அலிகான், ஜி.யு.போப் விருது – மரிய ஜோசப் சேவியர், இளங்கோவடிகள் விருது – கவிக்கோ ஞானச்செல்வன் (எ) கோ. திருஞானசம்பந்தம், அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்து, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது – அசோகா சுப்பிரமணியன் (எ) சோ.கா. சுப்ரமணியன், மறைமலையடிகளார் விருது – ப. முத்துக்குமாரசுவாமி, அயோத்திதாசப் பண்டிதர் விருது – வே. பிரபாகரனுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது – சா. முகம்மது யூசுப், க.ஜ. மஸ்தான் அலி, சிவ. முருகேசன், ந. கடிகாசலம், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, முருகுதுரை, மாலன் (எ) வே. நாராயணன், கிருசாங்கினி (எ) பிருந்தா நாகராசன், அ. மதிவாணன் ஆகிய பத்து பேருக்கும் மற்றும் 2018ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – த. நாகராசன், மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளாக: 2019ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருது – மலேசிய நாட்டைச் சேர்ந்த பெ. இராசேந்திரன், இலக்கண விருது – பிரான்சு நாட்டைச் சேர்ந்த முத்து கஸ்தூரிபாய், மொழியியல் விருது இலங்கை நாட்டைச் சேர்ந்த சுபதினி ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விருது பெறுவோர் நேற்று விருதுத்தொகையாக 1லட்சம் ரூபாயும் தமிழ்த்தாய் விருது பெற்றத் தமிழ் அமைப்பிற்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், இவர்கள் விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து