முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கையை 72 ஆக உயர்த்தியது அம்மா அரசு : முதல்வர் பெருமிதம்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ் வளர்ச்சித்துறையில் 5 ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கையை 72 ஆக்கியது அம்மா அரசின் சாதனை ஆகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:–

உலகப் பொதுமறையான திருக்குறள் மற்றும் அதனை உலகுக்கு அருளிய திருவள்ளுவரின் பெருமையை உலகறியச் செய்யவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். திருவள்ளுவரின் பெருமையினை உலகறியச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் தைத்திங்கள் 2 - ம் நாளை திருவள்ளுவர் தினமாக தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. அந்நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

 தமிழுக்கு பெருமை சேர்த்திடும் வகையில், தம் வாழ்நாளில் தமிழ்ப் பணியாற்றி வருவதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ள தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. திருவள்ளுவர் பெயரில் திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.திருக்குறளை கற்றுத் தெளிவதை விட, காட்சியில் கண்டால் எளிதில் மனதில் பதியும் என்பதால், அம்மாவின் ஆணையின்படி அரசு நிதி உதவியில் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நாள்தோறும் மாணாக்கர்கள் மற்றும் வெளிநாட்டினர் கண்டு பயனடைந்து வருகின்றனர்.

திருவள்ளுவர் கால எழுத்தில் மீண்டும் திருக்குறளைப் பார்த்தல் வேண்டும் என்ற அவாவை நிறைவேற்ற, திருக்குறளை வள்ளுவர் வாழ்ந்த கால வரிவடிவில் எழுதிட, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன் முயற்சியின் விளைவாக ‘‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்” என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், தமிழ் மூதாட்டி ஔவையார், கவிச்சக்கரவர்த்தி கம்பர், இளங்கோ அடிகளார், தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் மற்றும் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மாலை அணிவித்தும், அவர்தம் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும், அவர்தம் தமிழ்த் தொண்டினையும், படைப்பாற்றல்களையும் மனதில் தாங்கி வணக்கம் செலுத்தும் அற்புத நிகழ்வு தொடர்ந்து அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

பேறிஞர் அண்ணா இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டையும், புரட்சித் தலைவர் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையும், அம்மா எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டையும் நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள்.

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் புரட்சித் தலைவரால் 1981 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் மொழியின் வளம் பற்றி உலக மக்கள் அறிவதற்கு ஏதுவாக, திருக்குறள் தவிர மீதமுள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, 19.12.2019 அன்று என்னால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த தொல்காப்பியரின் சிலை 10.3.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பது அதன் சொல் வளமே ஆகும். தமிழ் மொழியின் சொல் வளத்தை காப்பது, சொல் வளத்தை பெருக்குவது, பிற மொழிக் கலப்பை தவிர்க்க துணை நிற்பது போன்ற நோக்கங்களின் அடிப்படையில் ‘சொற்குவை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று என்னால் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒரே தளத்தில் நிரல்படுத்தி வழங்குவதற்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று சொற்குவை திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கழக ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறையில், 5ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கை, தற்போது 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்று எண்ணற்ற சாதனைகள் அம்மாவின் அரசால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து