இலங்கை போரில் காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை - அதிபர் கோத்தபய ராஜபக்சே சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      உலகம்
Gotabhaya Rajapaksa 2020 01 21

கொழும்பு : இலங்கை போரில் காணாமல் போன ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து விட்டதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்கள் குறித்து முதன்முதலாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியுள்ளார். இதுகுறித்து இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த ஐ.நா. பிரதிநிதிகள் உடனான சந்திப்பில் இதனை அவர் கூறியுள்ளார். இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் ,

மாயமானவர்கள் அனைவரும் மரணித்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு அவர்களது குடும்பங்களே சான்று. ஆனால், அவர்களுக்கு என்ன ஆனது என்ற தகவல் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதன் காரணமாக அவர்கள் மாயமானதாகக் கூறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அரசாங்கத் தகவலின்படி கடந்த 30 ஆண்டுகளாக நடந்த இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்களில் 20,000 பேர் மரணமடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் விரைவில் வழங்க இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கோத்தபய ராஜபக்சே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து