முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நடைபெறும் கடைசி கற்பழிப்பு சம்பவமாக சிவகாசி சிறுமி கொலை சம்பவம் இருக்கும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, -  தமிழகத்தில் நடைபெறும் கடைசி கற்பழிப்பு சம்பவமாக சிவகாசி சிறுமி கொலை சம்பவம் இருக்கும் என்றும் சிறுமியை கொலை செய்த குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். 
சிவகாசி அருகே கடந்த திங்கள்கிழமை மாலை இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்ற 8 வயது சிறுமி ஒருவர் மாயமானார். சிறுமியை நீண்ட நேரம் தேடிய பெற்றோர், உறவினர்கள் சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் சித்துரழஜபுரம் அருகே முட்புதர்களுக்கு இடையே சிறுமி ஆடைகள் கிழிக்கப்பட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி பெருமாள் ஆலோசனையின்படி சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினா் சுற்றுகிராமபுற பகுதியில் சந்தேகபடும்படி உள்ள  நபர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிறுமியின் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கலெக்ட்ர் கண்ணன், எஸ்பி பெருமாள் ஆகியோர் சிறுமியின் பெற்றோர் உறவினருக்கு ஆறுதல் கூறினார்கள். அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3லட்சம் உதவி செய்தார். என் மகளுக்கு நேர்ந்தது போல் யாருக்குமே நடக்கக் கூடாது என குழந்தையின் தாய் கதறி அழுதார். அப்போது குழந்தையின் தாயிடம் பேசிய அமைச்சர், "இது உங்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. தமிழகத்தின் பிரச்சினை. தமிழகத்தில் இதுபோன்று சிறுமிக்குத் துயரம் நேர்வது இதுவே கடைசியாக இருக்கும். தமிழக காவல்துறையினரை நீங்கள் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இனி இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுப்பார்கள்" அந்த அளவிற்கு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். தொடர்ந்து அவர் சிறுமி படுகொலை செய்யப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டார். அப்போது அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோஷமிட்டனர். கூடுதல் கழிப்பறை வசதி, மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கண்ணன், எஸ்பி பெருமாள், டிஎஸ்பி பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் தனிப்படையினர் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் போலீசார் விரைந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சர் கூறும்போது,
சிவகாசி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. சிறுமி பலியான இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தேன் இந்த வழக்கில் குற்றவாளியை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை இனிமேல் நடைபெறாத அளவு இந்த வழக்கில் நடவடிக்கை இருக்கும்..குற்றவாளி இன்னும் சில மணி நேரத்தில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும் அதற்கான நடவடிக்கையை காவல் துறை எடுத்து வருகிறது..விருதுநகர் மாவட்டத்தில் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு உள்ளது. மீண்டும் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது.  படுகொலை செய்யப்பட்ட  சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது எனது சொந்த நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். சிறுமி கொலை வழக்கில் தமிழக காவல்துறை இரவு பகல் பாராமல் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்தார். தொடர்ந்து தெலுங்கானாவை போல இந்த வழக்கில் என்கவுன்டர் நடைபெறுமா என்ற கேள்விக்கு என்கவுன்டர் விரும்பி நடை பெறுவது அல்ல என்று கூறினார்.
படம் விளக்கம், சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்தித்து ஆறுதல் கூறினார்.
படம் விளக்கம்,  சிவகாசி அருகே 8வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பகுதியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கலெக்டர் கண்ணன், எஸ்பி பெருமாள் பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து