முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது தமிழகத்தில் கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      தமிழகம்
vijayabasker 2020 01 27

சென்னை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார். அதில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூலம் வருகிறார்கள். எனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய விமானநிலையங்கள், துறைமுகங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் மருத்துவக்குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை.

தமிழகத்திலும் எந்த பாதிப்பும் கிடையாது. கொரோனா வைரஸ் குறித்து தினமும் ஆய்வு நடத்தப்படுகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரோசு எடுத்துள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை. கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவை அச்சுறுத்தும் வைரஸ்

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஹாங்காங், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தைவானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் மருத்துவம் படிக்கும் அவர் இந்தியா திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் இந்த நோய்க்கு இதுவரை 81 பேர் பலியாகிவிட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து