முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் பெண்ணுக்கும் ராஜஸ்தான் வாலிபருக்கும் கொரோனா வைரஸ்?

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பீகாரில் ஒரு பெண்ணுக்கும் ராஜஸ்தானில் ஒரு வாலிபருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கத்தால் இதுவரை 2744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஹாங்காங், மெக்சிகோ மற்றும் தைவானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில், வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை சீனா மேற்கொண்டுள்ளது. விலங்குகளை விற்கவோ, வளர்க்கவோ, இறைச்சிக்காக பயன்படுத்தவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது. மேலும், வுகானில் இதற்காக பிரமாண்ட மருத்துவமனை கட்டப்படுகிறது. 

வுகானில் இன்னும் 250 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்தியர்கள் பலர் வெளியேறி விட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் வேலைக்காக தனித்து வசிப்போர் மட்டுமே அங்கிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. கேரளாவில் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் மருத்துவம் படிக்கும் அவர் இந்தியா திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவமனையின் தனி வார்டில் அவர் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மா கூறியுள்ளார். அவரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரசாலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வந்த பிறகே, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

இதுபோல் சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். 

அமெரிக்கா, பிரான்ஸ், நேபாளம், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து