முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வரலாற்றில் முதல்முறையாக குடுகுடுப்பைகாரர்களுக்கு ஜாதிச்சான்றிதழ்: வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்:

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்புமக்கள் குறை தீர்க்கும் முகாமில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடோடி இனத்தைச் சேர்ந்த குடுகுடுப்பைக்காரர்களுக்கு காட்டு நாயக்கர் இன ஜாதிச்சான்றிதழை நேரில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று வெகு சிறப்புடன் நடைபெற்றது.அதன்படி திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர்(பொ)கண்ணன்,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நா.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் வரவேற்றார்.
ஏழை,எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள் 500க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித் தொகை,வீட்டுமனை பட்டா,பட்டா மாறுதல் உட்பிரிவு,ஆதரவற்ற விதவைச் சான்று,முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை,விபத்து நிவாரணம் உள்ளிட்ட ரூ.1.25கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கி சிறப்புரையாற்றினார்.பின்னர் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பெற்றுக் கொண்டு அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதனிடையே நாடு சுதந்திரம் அடைந்தது முதலாக  ஜாதிச்சான்றிதழ் கேட்டு நாடோடிகளான காட்டுநாயக்கர் இனத்து குடுகுடுப்பைகாரர்கள் பல தலைமுறைகளாக போராடி வந்தனர்.இதனையறிந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நா.முருகேசனை இது தொடர்பாக ஆய்வு செய்து குடுகுடுப்பைக்காரர்களுக்கு காட்டுநாயக்கர் இனம் என ஜாதிச்சான்றிதழ் வழங்கிடுமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து கோட்டாட்சியர் நா.முருகேசன் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொண்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதலின்படி ஜாதிச்சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து திருமங்கலம் நகரில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடோடிகளாக வலம் வந்திடும் குடுகுடுப்பைக்காரர்கள் 20பேருக்கு முதல்கட்டமாக காட்டுநாயக்கர் இன ஜாதிச்சான்றிதழை தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழங்கப்பட்ட இந்த ஜாதிச்சான்றிதழை பெற்றுக் கொண்ட குடுகுடுப்பைக்காரர்கள் விழா மேடையில் தமிழக அரசுக்கும்,அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை குடுகுடுப்பை முழக்கி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த முகாமில் மாவட்ட கழக துணைச்செயலாளர் அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,ராமசாமி,மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,யூனியன் சேர்மன்கள் லதாஜெகன்,மீனாட்சிமகாலிங்கம்,திருமங்கலம் நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,கட்சி நிர்வாகிகள் செல்வம்,ஆண்டிச்சாமி,ஆலம்பட்டி ஜெகன்,சாமிநாதன்,சுகுமார்,சிவன்காளை,சிவகுமார், சிவனாண்டி,ராஜாமணி, அன்னக்கொடி,கொடிவைரன்,வெல்டிங்முருகன்,பழனிசாமி கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவில் திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து