முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வருகை அதிகரிப்பு

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி- இராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வர தொடங்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேல செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரைக்கோட்டை தேர்த்தங்கல் என இடங்களில் ஐந்து பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
இந்தச் சரணாலயங்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கூழைக்கடா, கரண்டி வாயன், செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வந்து தங்கிச் செல்கின்றன. அக்டோபர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை இந்தப் பறவைகள் இடம்பெயர்ந்து வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
 இதில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் இந்த அரிய வகை வெளிநாடு வாழ் பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன.
 பறவைகளின் வருகையை அதிகரிக்க, வனத்துறையினர், மழைக்காலத்துக்கு முன்னதாகவே மூன்று லட்ச ரூபாய் செலவில் நீர்நிலைகளை தூர்வாரும் நடவடிக்கைகளில் இறங்கினர். இதனால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் நீர் நிரம்பியுள்ளன.
 இதுகுறித்து வனசரகர் சதீஷ் கூறுகையில்...
 2010 ஆம் ஆண்டு தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கபட்டது.இந்த சரணாலயம் சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.  கடந்த சில ஆண்டுகளாக குறைந்த அளவில் தான் பறவைகள் வந்தன. இதனையடுத்து சரணாலய பகுதிகள் மற்றும் நீர்வரத்து பகுதிகள் தூர்வார பட்டு நீர்நிலைகள் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கின்றது. மேலும் சரணாலய பகுதிகளில் பறவைகள்  இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டுதோறும் கருவேல மரங்கள் நடவு செய்யபடுகிறது. கிராமத்தில் உள்ள தேவையற்ற கருவேல மரங்கள் முழுவதும் அகற்றபடுகிறது. இதனையடுத்து இந்தாண்டு மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், அரிவாள் மூக்கன், உள்ளிட்ட முப்பது வகையான பறவைகள் வந்துள்ளன. கடந்தாண்டைவிட பத்தாயித்துக்கும் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. தீபாவளி, திருமணம் போன்ற விசேஷ நாட்களில் நாட்களில் பட்டாசு வெடிக்காமல் உள்ளனர் தேர்த்தங்கல் கிராம மக்கள். தேர்த்தங்கல் பகுதி மக்கள் வனத்துறையினருடன் இணைந்து ஆண்டுதோறும் பறவைகளை பாதுகாப்போம், என உறுதி மொழி எடுத்து கொள்கின்றனர். மேலும் பறவைகளை வேட்டையாடுபவர்களை தடுக்க வனத்துறையினருடன் இணைந்து கிராத்தினர் செயல்படுகின்றனர். கடுமையான வறட்சியால் கடந்தாண்டு வெறும் ஐந்தாயிரம் பறவைகள் மட்டுமே வந்தன. நல்ல மழை காரணமாக வனபகுதியில் நீர் தேங்கி இருப்பதால் இந்தாண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இனப்பெருக்கம் முடிந்த பின் மார்ச் மாதம் பறவைகள் மீண்டும் சென்று விடுகின்றன என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து