முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் விடுதலை

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

லாகூர் : பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்பர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலின் சிலைகள், கடந்த 26 -ம் தேதி மர்ம நபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பிரேம் குமார் என்பவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கோவிலை சேதப்படுத்தியதற்காக 12 முதல் 15 வயதுடைய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் இது குறித்து பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் கோவிலுக்குள் புகுந்து சிலைகளை சேதப்படுத்தியதையும், அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இந்த விசாரணையின் போது புகார் அளித்த பிரேம் குமார், சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சிறுவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேம் குமார், உள்ளூர் இந்து பஞ்சாயத்து தலைவர்களின் வேண்டுகோளின்படி நல்லெண்ண அடிப்படையில் சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து