முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சிறைகளில் குற்றங்களுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்க - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : சிறைச்சாலைகளில் குற்றங்களுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும், சிறையில் உள்ள கைதிகளையும், பணியாளர்களையும் முறையாக தொடர்ந்து கண்காணித்து கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, முறைகேடுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர் உள்ளிட்ட 9 மத்திய சிறைகள் உள்ளன. மேலும் மாவட்ட சிறைகள், கிளை சிறைகள், சிறார் சிறைகளும் உள்ளன. எந்த சிறைச்சாலையாக இருந்தாலும் அனைத்தையும் முறையாக கண்காணித்து விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது சிறைநிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகள் சிலவற்றில் கைதிகள் சிறைச்சாலை விதிகளை மீறி செல்போன், போதைப்பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக, சிறைச்சாலையையும், குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு வந்த கைதிகளையும் நாள் முழுவதும் முறையாக கண்காணிக்க வேண்டும்; போதைப்பொருளையோ, செல்போனையோ அல்லது வேறு எந்த தனிப்பட்ட வசதியையோ சிறை நிர்வாகம் தெரிந்தோ, தெரியாமலோ அனுமதிக்கக் கூடாது. அதே போல, கைதிகளுக்கு இடையே சண்டை, சச்சரவு ஏற்படாமல் இருக்கவும், கைதிகளை திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும், அவர்களுக்கு உரிய வசதிகளை மட்டுமே வழங்கி முழு பாதுகாப்பு கொடுப்பதும் முறையானது, சரியானது. எனவே, சிறைச்சாலைகளில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், பாரபட்சம் காட்டாமல் இருக்கவும், விதிமீறல்களில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்களை கண்காணிக்கவும், சிறைகளை முறையாக பராமரித்து அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்கவும், தவறு நடந்திருப்பின் உரிய நடவடிக்கையை எடுக்கவும் சிறைநிர்வாகம் முன்வர வேண்டும். மேலும், தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளை தொடர் நடவடிக்கை மூலம் முறையாக, சரியாக கண்காணித்து குற்றச்சாட்டுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஜி.கே. வாசன் தனது அறிக்கயைில் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து