முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் விரைவில் அமைகிறது: ரூ. 50 ஆயிரம் கோடியில் பெட்ரோ கெமிக்கல் ஆலை : ஹால்டியா நிறுவன தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கடலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் கெமிக்கல் ஆலை அமைய இருக்கிறது. இது தொடர்பாக ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவன தலைவர் மற்றும் துணைத்தலைவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். 

அமெரிக்க பயணம்

கடந்த ஆண்டு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் துவங்க உள்ள சாதகமான நிலையையும், அரசு அளிக்கும் பல்வேறு சலுகைகள், திட்டங்களையும் முதல்வர் எடுத்து கூறினார். தட்டுப்பாடில்லா மின்சாரம், சட்டம் ஒழுங்கு நல்லமுறையில் பராமரிப்பு, திறன்மிக்க இளைஞர்கள், சாலை போக்குவரத்து வசதி என அனைத்தும் தமிழகத்தில் உள்ளன என அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கூறினார். 

முதலீடுகள் ஈர்ப்பு

முதல்வரின் அழைப்பை ஏற்று ஏராளமான தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன் வந்தனர். இந்த சுற்றுப் பயணத்தின் போது 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதனால் 35 ஆயிரத்து 520–க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன. 

பெட்ரோ கெமிக்கல் ஆலை

இந்த நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் துவங்க இருக்கும் பெட்ரோ கெமிக்கல் ஆலை குறித்து ஆலோசனை நடத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு கொள்கை ரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

ரூ. 50,000 கோடியில்...

அதன் தொடர்ச்சியாக, ரூ. 50,000 கோடி முதலீட்டில், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முகாம் அலுவலகத்தில் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணைத் தலைவர் ராபின் முகோபத்யாய் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து