முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் - பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் - சேலம் விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சேலம் : தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்காக, சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஆசியாவின் பெரிய பூங்கா

சேலம் தலைவாசலில் அமையவுள்ள நவீன கால்நடை பூங்காவிற்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்காவாக ரூ.1,022 கோடி மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.  இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கால்நடை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது கால்நடைப் பூங்காவை பார்த்த பின் தமிழகத்திலும் அது போல் அமைக்க வேண்டும் என்று எண்ணினேன். கால்நடை வளர்ப்பு தொழில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது. அரசின் திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. பால் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. திருவண்ணாமலை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.  ஓசூரில் ரூபாய் 20 கோடி செலவில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படுகிறது. தமிழக அரசு தேசிய விருது பெறுவது எவ்வளவு பெரிய பெருமை, எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் அது பிடிக்கவில்லை. தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என கொச்சைப்படுத்தினார் ஸ்டாலின். நமக்கு நாளை எதிர்காலம் உண்டா என பயந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியில்லை

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தந்தது தி.மு.க.அரசுதான். ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. நெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அ.தி.மு.க. அரசு அனுமதி தராது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூங்காவின் சிறப்பு

முதல்வர் அடிக்கல் நாட்டிய இந்த கால்நடைப் பூங்கவானது இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல் மேலை நாடுகளில் இருந்தும் கூட மாணவர்கள் இங்கு வருகை தந்து படிக்கும் வகையிலும், அவர்கள் இங்கேயே தங்கி ஆராய்ச்சி செய்யும் வகையில் ஆராய்ச்சி நிலையமும் அமைக்கப்படவுள்ளது. அதுமட்டுமில்லமல் தமிழகத்தில் உள்ள நாட்டு கால்நடையினங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாட்டினங்களை பாதுகாக்க பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு நாட்டுப்பசுக்கள், ஆட்டினங்கள், செல்லப் பிராணிகளான நாய்கள் ஆகியவற்றை இங்கே உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல்   மீன்வளர்ப்பு, ஆடு வளர்ப்பு இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து விவசாயப்பெருங்குடி மக்களுக்கும், குறிப்பாக சிறு, குறு விவசாயிகளும் இங்கே வருகை தந்து கால்நடைகளை வளர்ப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டு அதன்மூலம் வருவாயினை பெருக்கிக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

பேட்டிங் செய்த முதல்வர்

மேலும் சேலம் மாவட்டம், வாழப்பாடி, காட்டுவேப்பிலைப்பட்டியில்  சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனால் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கலந்து கொண்டார். அப்போது அவர் பந்து வீச முதல்வர் எடப்பாடி பேட் செய்தார். சேலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் அறிவித்ததை முதல்வர் வரவேற்று பேசினார். 

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், ஜெயகுமார், அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து