முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை நேரில் சந்திக்கத் துணிவின்றி இரவல் மூளைகளிடம் யாசகம் கேட்கிறார்கள் - தி.மு.க. மீது துணை முதல்வர் ஓ.பி.எஸ். மறைமுக தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சேலம் : மக்களை நேரில் சந்திக்க துணிவின்றி இரவல் மூளைகளிடம் யாசகம் கேட்கிறார்கள் என்று தி.மு.க.வை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மறைமுகமாக தாக்கி பேசினார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் நேற்று நடந்த 900 ஏக்கரில் ரூ.1022 கோடியில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,

நாம் அன்பு காட்டுகின்ற கால்நடைகளை, மிகப் பழமையான செல்வ வடிவமாக மக்கள் கொண்டிருந்தனர். காரணம், இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. மரங்கள், விலங்குகள், பறவைகள்என, அனைத்திற்கும் சொந்தமானது என்று, தமிழர்கள் உணர்ந்திருந்தார்கள். பூவுலகைக் காக்க அவதாரம் எடுத்த ஸ்ரீ கிருஷ்ணர், பசுக்களின் கூட்டத்தைப் பாதுகாக்கும் தலைவராக இருந்து அருள்பாலித்தார்.இயேசுபிரான் நல்லமேய்ப்பராக இருந்து, தன்னிடம் இருக்கும் 100 ஆடுகளில் ஒன்றுகாணமால் போனாலும் அதைக் கண்டுபிடிக்கும் வரை ஓயலாகாது என உவமை சொன்னார். மிருகங்களைப் பாதுகாப்பவர்களுக்கு அல்லா நற்கூலி கொடுப்பார் என்று கூறினார் நபிகள் நாயகம்.  அவர்கள் காட்டிய வழியில்தான், அம்மாவும் மிருகங்கள் மீதும், செல்லப் பிராணிகள் மீதும், கால்நடைகள் மீதும் கொள்ளைப் பிரியம் வைத்து அன்பு காட்டினார். இந்தியாவிலேயே முதன்முதலாக அம்மா, யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் ஏற்பாடு செய்ததும், மிருகவதை கூடாது என்று கூறியதும் இதன் அடிப்படையில்தான். கால் நடைகள் செழிக்க வேண்டும், கிராமப் பொருளாதாரமும் உயரவேண்டும், கிராமப்புறப் பெண்களின் வாழ்வும் வளம் பெறவேண்டும் என்னும் மூன்று நோக்கங்களையும் நிறைவேற்றும் வகையில், விலையில்லாக் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தையும் அம்மா வெற்றிகரமாக செயல்படுத்தினார். அம்மா அரசின் அனைத்து துறைகளும், ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுக் கொண்டு சாதனைகளைப் படைத்து வருகின்றது.  இவ்வாறு சாதனை படைத்துக் கொண்டிருக்கும் அரசின் மற்ற துறைகளுக்கு, தான் சற்றும் சளைத்தது இல்லை என்கிற வகையில், கால்நடை பராமரிப்புத் துறை சாதனைக்கு மேல் சாதனைகளைப் படைத்து வருகிறது.   

தமிழகத்தில் ஏற்கனவே இருந்த 2 கால்நடை மருத்துவக் கல்லூரிகளோடு, ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலியில் அம்மாவால் 09.10.2012 அன்று இரண்டு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் துவங்கப்பட்டன. தற்போது ஐந்தாவதாக, 01.11.2019 அன்று ஆணையிடப்பட்டு, தலைவாசலில் புதியகால் நடைமருத்துவக் கல்லூரி துவக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அம்மா அரசால் கால்நடைகளின் எண்ணிக்கையைப் பெருக்கவும், அவற்றை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், தடுப்பூசிகள் வழங்குவது உட்படபல விதமானவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் சிறப்பாகச் செயலாற்றியமைக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலை சிறந்த விருதை பெற்றுள்ளது என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன் .     தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.  இது சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கால்நடைகளுக்கும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கும், கால்நடை ஆர்வலர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.
 இப்படி, துறைகள்தோறும் சாதனை, மாவட்டங்கள் தோறும் சாதனை, மாநிலம் முழுவதும் சாதனை என்று சாதனை மேல் சாதனை படைத்து வந்தாலும், எதிர்க்கட்சிகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாராட்டமனம் வரவில்லை. குறை சொல்லும் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. மக்களுக்காகவே தன் சிந்தனையைச் செலவு செய்தார் தந்தை பெரியார். மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களிடம் செயல்படுத்து என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. மக்களே எஜமானர்கள், மக்கள் புத்திசாலிகள். அவர்கள் மறதிப் மனிதர்கள் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள். ஏமாந்து போவார்கள் என்றார் எம்.ஜி.ஆர். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்றார் அம்மா. ஆனால் இன்றைக்கு சில பேர் மக்களை மறந்து விட்டு, அவர்களை நேரில் சந்திக்கத் துணிவின்றி, என்ன சொல்லி மக்களை ஏமாற்றலாம்? என்ன செய்து அவர்களது கண்களை கட்டி வாக்குகளை கபளீகரம் செய்யலாம் என்று திட்டம் போட்டுத் தரச் சொல்லி, இரவல் மூளைகளிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மக்களும் கௌதம புத்தரைப் போலத்தான்.“நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? ” என்ற ஒரே கேள்வியை, கடந்த தேர்தலின் போது மக்களை பார்த்து அம்மா கேட்டார்.     இதை பார்த்து கொண்டு இருந்த தி.மு.கவின் அன்றைய செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கானமயிலாட  கண்டு இருந்த வான்கோழி, தானும் அதுவாக பாவித்து தன் பொல்லாசிறகை விரித்து ஆடியதை போல மக்களை பார்த்து நீங்கள் செய்வீர்களாக என்று கிண்டல் செய்வது போல கேட்டார். அதற்கு “செய்ய மாட்டோம்” என்று பதில் அளித்து தோல்வி காணச் செய்தார்கள் மக்கள். அவரோடு சேர்ந்து கொண்டு ஏனைய எதிர்க்கட்சிகள் “நீங்கள் செய்வீர்களா?” என்று கேட்டபோது “முயற்சித்துப் பாருங்கள்” ஆனால் முடியாது என்று சொல்லி அவர்களைப் புறக்கணித்தார்கள். ஆனால், தமிழகமே எனது இல்லம் என்றும், தமிழக மக்களே என் பிள்ளைகள் என்றும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என்ற உறுதியுடன் மனம் நிறைந்த பாசத்துடன் “நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?”என்று அம்மா  கேட்டார். அதற்கு மக்கள் “நிச்சயம் செய்வோம், நிச்சயமாக செய்வோம்” என்று பதில் சொல்லி, செயலிலும் அதனைக் காட்டி  அம்மாவுக்கு மகத்தான வெற்றியைப் பரிசாகத் தந்தார்கள்.அதே நம்பிக்கையை, அதே உறுதியை, அம்மாவின் நல்லாட்சியின் மீதும், அம்மாவின் விசுவாசத் தொண்டர்கள் மீதும் மக்கள்வைத் திருக்கிறார்கள். 2021-ல் எதிர்வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அதற்கு முன்னதாக வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதே வெற்றியை அம்மா அரசுக்கும், அம்மாவின் இயக்கத்திற்கும் மக்கள் தருவார்கள் தருவார்கள்,  இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து