முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 1 ரன்னில் வெற்றி

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

கிழக்கு லண்டன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன்னில் வெற்றி பெற்று அசத்தியது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கிழக்கு லண்டனில் நடந்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. தொடக்க வீரர் பவுமா 27 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் குயின்டன் டி காக் 15 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), வான்டர் டூசன் 26 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். ஜோர்டன் 2 விக்கெட்டும், மொய்ன் அலி, சாம் கரண், மார்க்வுட், ஆதில் ரஷீத், பென்ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

178 ரன் இலக்குடன் இங்கிலாந்து அணி பின்னர் களம் இறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன்னில் வெற்றிபெற்றது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது. நிகிடி வீசிய முதல் பந்தில் சாம் கரண் 2 ரன் எடுத்தார். 2-வது பந்தில் அவர் அவுட் ஆனார். 3-வது பந்தில் மொய்ன் அலி ரன் எடுக்கவில்லை.4-வது பந்தில் 2 ரன் எடுத்தார்.

இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மொய்ன் அலி ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் ஆதில் ரஷீத் 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் 1 ரன்னில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. தொடக்க வீரர் ஜேசன்ராய் 38 பந்தில் 70 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும். கேப்டன் மார்கன் 34 பந்தில் 52 ரன் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மார்கன் 19-வது ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடித்தார். ஹென்ட்ரிக்ஸ் வீசிய அந்த ஓவரில் மொத்தம் 16 ரன் எடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றியை கோட்டை விட்டது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், ஹென்ட்ரிக்ஸ், பெகுலு வாயோ தலா 2 விக்கெட்டும், ஸ்டெய்ன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி டர்பனில் இன்று நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து