சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 3,100 கோடி

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Chennai Metro Rail 2020 02 14

Source: provided

சென்னை : சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மொத்தம் 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:–

முழுமையாகச் செயல்படும் மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்பை சென்னை நகரம் பெற்றுள்ளது. நவீன பொதுப் போக்குவரத்து முறையின் பயன்களை மக்கள் பெறுவதற்கு, போக்குவரத்து வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துதல் அவசியமாகும். எனவே, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 118.90 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான திட்ட வடிவமைப்புகள் தயாராக உள்ள நிலையில், இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து இரண்டாம் கட்டத்தின் எஞ்சியுள்ள, சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும் மற்றும் சென்னை கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலுமான வழித்தடப் பகுதிகளுக்கு, நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட திட்டத்திற்கு, 50 சதவீத பங்கு மூலதனத்தினை மத்திய அரசு வழங்கியது போன்று, இந்த இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் 50 சதவீத பங்கு மூலதனம் வழங்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. 2020–21ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக் கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து