முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு: தமிழக அரசின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் - ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது - மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான பிரதிநிதிகள் குழு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அளித்தது. அந்த கடிதத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும், எந்த ஒரு திட்டத்தை அறிவிக்கும் முன் தமிழக அரசிடம் ஆலோசிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்வரின் உத்தரவின் பேரில், என்னுடைய தலைமையில், ஏ. நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், ஏ.கே. செல்வராஜ், எஸ். முத்து கருப்பன், ஏ. விஜயகுமார், என். சந்திரசேகரன், அ. முகமது ஜான் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் துறை முதன்மை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு கடந்த  10.2.2020 அன்று டில்லியில், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்து, முதல்வரின் கடிதத்தைக் கொடுத்தது. அந்த கடிதத்தில் உள்ள விவரங்கள் என்ன என்பது பற்றி சிலர் கேட்டிருக்கிறார்கள். அந்த கடிதத்தின் விவரத்தை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது எனக் கருதி அக்கடிதத்தை பத்திரிகைகளில் வெளியிடுகிறேன்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,  கடல் பகுதி மற்றும் நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான திட்டங்களை அமல்படுத்தும் சட்ட திருத்தம் தொடர்பான அறிவிக்கை குறித்தும், திட்டங்களை மக்கள் கருத்து கேட்காமல் நிறைவேற்றக் கூடாது எனவும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அந்த அறிவிக்கையானது தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் வேளாண்மை மண்டலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால் அதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. எனவே அந்த அறிவிக்கைக்கு எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். 2014-ம் ஆண்டு கால கட்டத்தில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி படுகை அடிப்படையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமைத்தார் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த குழுவானது பல்வேறு விஷயங்களுடன் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை குறிப்பிடுகிறேன். காவிரி டெல்டா பகுதியானது தமிழகத்தின் நெல் களஞ்சியம் ஆகும். இந்த பகுதி மக்கள் அடிப்படை வாழ்வாதாரமானது விவசாயத்தை சார்ந்தது. நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்தின் காரணமாக வேளாண்மை செய்யப்படும் 4,266 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், தினசரி அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் கிலோ லிட்டர் தண்ணீரை 25 ஆண்டு காலம் உறிஞ்சி வெளியேற்றலாம் என்பதால் அந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.  தண்ணீரை நிலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதே போல் 667 சதுர கி.மீ. பரப்பளவில் குறுக்கும், நெடுக்குமாக அமைக்கப்படும் குழாய் பதிப்பு காரணமாகவும் கடும் சுற்றுச்சூழல் ஆபத்து உருவாகும்.  அதே போல் வாயுக்களை வெளியேற்றுவதன் காரணமாக காற்று மாசு ஏற்படும்.  தொழில்நுட்ப நிபுணர் குழுவானது வேளாண்மை மண்டலமாக உள்ள பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பணப்பயன் கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் காவிரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசு மாநில அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என 8.10.2015 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக மேலும் கூடுதலாக புள்ளி விவரங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள், பட்டுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள டெல்டா பகுதி வட்டங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக உள்ளது. 28 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாநிலத்தின் 32 சதவீத உணவு தேவையை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. மேலும் காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படும் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் கடல்நீர் நிலத்துக்குள் புகும் ஆபத்து உள்ளது என தொழில்நுட்ப நிபுணர் கமிட்டி ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. காவிரி டெல்டா பகுதியானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக உள்ளது. 28 லட்சம் ஏக்கர் பகுதியில் 33.26 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்து தருகிறது. அதேபோல் தென்னை, வாழை மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களை உற்பத்தி செய்யும் முக்கிய பகுதியாகவும் விளங்குகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் புயல்கள், வெள்ளம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்படும் பகுதியாக இது விளங்குகிறது. 2018-ம் ஆண்டு உருவான கஜா புயல் காரணமாக 65 லட்சம் தென்னை மரங்களும், பல்லாயிரக்கணக்கான விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டன. மேலும் வேளாண்மையை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மாநிலத்தின் உணவு பாதுகாப்பிலும் தாக்கத்தை உருவாக்கும். காவிரி டெல்டா பகுதியானது ஆழ்குழாய் பாசனம் மூலமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் நிலத்தடி நீரில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு அங்கு போடப்பட்டிருக்கும் ஆழ்குழாய் கிணறுகளும் பாதிக்கப்படும். அதே போல் குறுக்கும் நெடுக்குமாக பதிக்கப்படும் எரிவாயு மற்றும் வீணாகும் நீரை கொண்டு செல்லும் குழாய்களால் மேற்பகுதியில் உள்ள இயற்கை வளமும், அதை சார்ந்த பகுதிகளும் பாதிக்கப்படும். 1985-ம் ஆண்டிலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே மேலும் இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டத்தால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படும். வேளாண் மண்டலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடல்நீர் உட்புகுதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஆபத்து நிலவும் சூழ்நிலையில் இது பெரும் பாதிப்பை உருவாக்கும்.காவிரி டெல்டா பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ள பகுதியாகும். இவையும் இத்திட்டத்தால் பாதிக்கப்படும். மேலும் காவிரி டெல்டா பகுதிகளானது தொல்லியல் மற்றும் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. இப்பகுதியில் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம், நவக்கிரக கோவில்கள், வேளாங்கண்ணி தேவாலயங்கள், நாகூர் தர்கா போன்றவை அமைந்துள்ளன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் இந்த கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் சேதமடையும் ஆபத்து உள்ளது. எனவே காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் திட்டம் இருந்தால் அதை மத்திய அரசு கைவிட வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசு முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அது தங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து