குடியிரிமை சட்ட போராட்ட விவகாரம்: சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை - டி.ஜி.பி. திரிபாதி, கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      தமிழகம்
CM Edapadi consult 2020 02 16

சென்னை : குடியுரிமை சட்ட போராட்டத்தால் எழுந்துள்ள சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர், போலீசார் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடிநடத்தி கலைந்து போக செய்தனர். இது குறித்து முதல்வரை சந்தித்து கமிஷனர் விளக்கமும் அளித்தார். அன்றிரவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து, பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. திருநெல்வேலி மேலப்பாளையம், தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதி, காயல்பட்டினம், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

இந்த நிலையில் டி.ஜி.பி. திரிபாதி பிறப்பித்த உத்தரவில்,

குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனிக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன், திண்டுக்கலுக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அவசர ஆலோசனை

இந்த நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலாளர் க. சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே. திரிபாதி, சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து