சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டது - தடியடியில் ஒருவர் இறந்ததாக வதந்தி பரப்புகிறார்கள் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      தமிழகம்
cm edapadi assembly speech 2020 02 17

சென்னை : மத்திய அரசு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது காவல் துறையினர் மீது திட்டமிட்டே போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தடியடி சம்பவத்தில் ஒருவர் இறந்ததாக வதந்தி பரப்பப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக அளித்த விளக்கம் வருமாறு:-

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சில இஸ்லாமிய அமைப்புகள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று வந்த தகவலின் அடிப்படையில், 14.2.2020 அன்று காலை 11.00 மணியளவில், இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த 13 பள்ளிவாசல்களின் சார்பாக, அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகளான லத்தீபுல்லா, கோல்டு ரபீக், அப்பாஸ், வண்ணை பஷீர், ஏஜாஸ், அனீஸ், சம்சுதீன், முனீர்பாஷா, மெக்கானிக் அலி ஆகியோரை அழைத்து இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் எண்ணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையாளர் தலைமையில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.  அப்பொழுது அவர்கள் 14.2.2020 அன்று போராட்டம் நடத்தும்  எண்ணம் ஏதும் இல்லை என்று ஒருமித்த கருத்தாக தெரிவித்தனர்.  மேலும், 23.2.2020 அன்று தான் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வேண்டி மனு செய்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால், 14.2.2020 அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில், சுமார் 200 பெண்கள் உட்பட 300 இஸ்லாமியர்கள், வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணன் ரவுண்டானா அருகில் குழுமி, இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.  தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், ஆர்ப்பாட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது எனவும், இப்போராட்டத்தினால், போக்குவரத்து பாதித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கும் எனவும் எடுத்துரைத்தனர். ஆனால், மேற்படி நபர்கள் காவல் துறையினரின் அறிவுறுத்தலையும் மீறி மறியலில் ஈடுபட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவதூறு கோஷங்கள் எழுப்பிய 40 ஆண்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் ஒத்துழைக்க மறுத்தனர்.  காவல் துறையினர் அவர்களை கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றினர்.  பேருந்துக்குள் ஏறியவர்கள் ரகளையில் ஈடுபட்டு, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தினர். கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள வைகை மகால் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். 

அரசு பேருந்தை சேதப்படுத்தியது சம்பந்தமாக, பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் தமிழ்நாடு பொது சொத்து (சேதம் மற்றும் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது. மேற்படி சம்பவத்தை தொடர்ந்து, மாலை சுமார் 6 மணியளவில் கண்ணன் ரவுண்டா அருகில், இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் அனுமதியில்லாமல் அதிகளவில் கூடி கோஷமிட்டவாறு போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக செயல்பட்டனர்.  அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி பலமுறை காவல் துறை உயரதிகாரிகள் உட்பட காவல் துறையினர் அறிவுறுத்தியும், அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், அவர்களை கைது செய்வதாக மீண்டும் எச்சரிக்கப்பட்டனர்.  அதனையும் மீறி, காவல் துறையினரை நோக்கி போராட்டத்தினர், தண்ணீர் பாட்டில், செருப்பு, கற்கள் ஆகியவற்றை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.  இக்கலவரத்தில், இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமாருக்கு வலது கையில் காயமும், பெண் காவலர் உதயகுமாரிக்கு வலது கன்னம் மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளிலும், மற்றொரு பெண் காவலர் கலாவிற்கு வலது கண்ணில் காயமும் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,  போராட்டக்காரர்கள் எறிந்த கல்லால் கண்ணன் ரவுண்டானாவில் பாதுகாப்பு பணியிலிருந்த மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் விஜயகுமாரிக்கும் தலையில் காயம் எற்பட்டு, மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.  போராட்டக்காரர்கள் கலவரத்தைத் தூண்டக் கூடாது எனவும், அமைதியான முறையில் தங்களுடைய கோரிக்கைகளை சொல்லி விட்டு கலைந்து செல்லுமாறும் காவல் துறையினர் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். ஏற்கனவே போராட்டக்காரர்கள் அரசு பேருந்தை சேதம் செய்ததையும், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதையும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, தடுப்புகள் அமைத்து, காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அரணாக இருந்தனர். சிறிது நேரத்தில், வெளியில் இருந்து வந்த போராட்டக்காரர்கள், அப்பகுதி மக்களை தூண்டி விட்டு காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை தள்ளி விட்டு வெளியே வந்து அங்கு அரணாக நின்று கொண்டிருந்த காவல் துறையினரை ஆக்ரோஷமாக தள்ளிவிட்டு, சாலை மறியல் செய்ய முற்பட்டனர். அப்போது அவர்களைக் கைது செய்ய முற்பட்ட காவல் துறையினர் மீது கற்கள், பாட்டில் மற்றும் செருப்புகளை வீசினார்கள். இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சுமார் 82 பேரை கைது செய்து, அரசு பேருந்தில் ஏற்றிய போது, பேருந்தில் ஏறியவர்கள், பேருந்துக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டு, அப்பேருந்தின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்தனர். மேற்படி போராட்டகாரர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள வாணி மஹால் கல்யாண  மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். இது சம்மந்தமாக காவல் ஆய்வாளர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில்  வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஐ.பி.சி. மற்றும்  தமிழ்நாடு பொது சொத்து (சேதம் மற்றும் தடுப்பு) ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆறு தெருக்கள் தாண்டி வாழ்ந்து வந்த எழுபது வயது நிரம்பிய பசுருல்லா என்பவர்  நோயின் காரணமாக  இயற்கையாக மரணமடைந்தார்.  ஆனால், அவர் காவல் துறையினரின்  தடியடியில் இறந்ததாக உண்மைக்கு மாறான வதந்தி பரப்பப்பட்டது.  அந்த வதந்தியை நம்பி  சென்னை மாநகர் மற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆங்காங்கே இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது சம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில்  இரவு 9.30  மணி முதல்  இஸ்லாமிய  அமைப்பு  தலைவர்களான  எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அமீர்  அம்சா, வட சென்னை  எஸ்.டி.பி.ஐ.  மாவட்ட தலைவர் காஜா மொய்தீன்,    ஐ.என்.டி.ஜே.  தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லீம் மக்கள் தொண்டு  இயக்கத்  தலைவர்   அப்பல்லோ ஹனீபா, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது   இஸ்மாயில்,   தேசிய தவ்ஹீத் பேரவை பொது செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன்,  இந்திய தேசிய லீக் தலைவர் கோனிக்கா பஷீர், சம்சா ஷேக், முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், உஸ்மான் அலி, நசுருதீன், சர்வேஸ்  ரசாதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து  செல்ல உடன்பாடு  ஏற்பட்டு,  கைது  செய்யப்பட்டவர்கள்  விடுவிக்கப்பட்டனர்.  ஆனால்,   ஆர்ப்பாட்டக்காரர்கள்   கலைந்து செல்லாமல்   தொடர்ந்து   கோஷமிட்டவாறு   இரவு   முழுவதும்  போராட்டம் நடத்தினர்.  15.2.2020 அன்று முழுவதும், கண்ணன் ரவுன்டானாவில், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பெண்களும், ஆண்களும் அந்த ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்திலே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கொண்டனர். இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மீண்டும் 15.2.2020 அன்று இரவு 8.30 மணியளவில் மீண்டும்  இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் காவல் ஆணையரகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.  இக்கூட்டத்தில் இஸ்லாமிய அமைப்பினர், தங்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு எந்தவித இடையூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், காவல் துறை அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் தங்களுடைய  அமைப்பைச் சேர்ந்தவர்களை வன்முறையில் ஈடுபடாமல், சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வலியுறுத்தினார். மேற்படி கலந்தாய்வு கூட்டம் முடிந்தவுடன், இரவு மீண்டும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  14.2.2020-ம் தேதி வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் சி.ஏ.ஏ.-க்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற  சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேட்டி அளித்தனர். மூன்றாவது நாளாக 16.2.2020 அன்றும் தொடர்ந்த  போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மருத்துவர் அணி செயலாளர் சாந்தி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி  சீமான் மற்றும் காயத்ரி  காந்தாடை  ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில் வண்ணாரப்பேட்டை அனைத்து இஸ்லாமிய ஜமாத்தார்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் லத்தீப் தலைமையில் மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருக்கின்றார்கள். அதேபோல, 16.2.2020 அன்று இரவு என்னுடைய இல்லத்திலே எஸ்.டி.பி.ஐ.  கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் அக்கட்சியிலே இடம் பெற்றிருக்கின்ற பல்வேறு நிர்வாகிகள் என்னை சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்திருக்கின்றார்கள். இன்று (17.2.2020) (நேற்று) காலை 9 மணியளவில் மேற்படி இடத்தில் சுமார் 75 பெண்கள் உட்பட 150 நபர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழகத்தில் இதற்கு முன்பு பல்வேறு இடங்களிலேயே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலங்கள் நடைபெற்றது. காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் முழு பாதுகாப்பு அளித்தார்கள். இதுவரை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இன்றைக்கு அந்த ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்துமே நடைபெற்று முடிந்திருக்கினறன. ஆனால் வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரிலே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் கிடைத்திருக்கின்றன. ஆகவே, பொய் பிரச்சாரங்களையும், விஷம செயல்களையும் புறம் தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  தமிழ்நாட்டில் எந்த ஒரு சிறுபான்மையின சகோதர சகோதரிக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அம்மாவின் அரசு அனுமதிக்காது என்பதையும், அம்மாவின் அரசு சிறுபான்மை இன மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விளக்கம் அளித்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து