முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலோசனை கூட்டங்களில் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியபடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் தீர ஆராய்ந்து செயல்படுத்துவோம் : கட்சியினருக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். உறுதி

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியபடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் தீர ஆராய்ந்து செயல்படுத்துவோம் என்று கட்சியினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

 தமிழக மக்களின் பேரன்பைப் பெற்ற ஒப்பற்ற அரசியல் இயக்கமாகிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் களத்திலும், தேர்தல் பணிகளிலும் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும், மக்களுக்கு இன்னும் எவ்வாறெல்லாம் தொண்டு செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து, கலந்துரையாடி நம் கடமைகளை திட்டமிட தலைமைக் கழகத்தில் நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்திருக்கும் ஆலோசனைக் கூட்டங்கள் மிகச் சிறப்பாகவும், பயனுடையதாகவும் அமைந்திருந்தன.  இந்த ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் சென்றதைக் கண்டு நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்.     

எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரிடம் அரசியல் பாடம் பயின்ற நாம் அனைவரும் கழகத்தின் உயர்வுக்காகவும், வெற்றிக்காகவும் முழு மூச்சுடன் பணியாற்ற உறுதிபூண்டிருப்பதை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரிடமும் காணமுடிந்தது. கழகத்தின் அழைப்பை ஏற்று, மாவட்ட ரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச்செயலாளர்  அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணிகள் குறித்தும், கழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், கழக நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினீர்கள். 

கழகம் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் தெரிவித்துள்ள கருத்துகளை பரிசீலித்து ஆக்கப்பூர்வமான வகையில் கழகத்தை வழிநடத்திச் செல்வோம் என்று உறுதி கூறுகிறோம்.  ஆலோசனைக் கூட்டத்தில் கழக நிர்வாகிகளில் சிலர் சுட்டிக்காட்டியவாறு ஆங்காங்கே செய்யப்படவேண்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் தீர ஆராய்ந்து விரைவில் செயல்படுத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மாவின் நல்லாசியோடு, கழக ஒருங்கிணைப்பாளர், கழக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை ஏற்றுள்ள நாங்கள், உங்கள் ஆலோசனைகளையும், அனுபவங்களையும் பெரிதும் மதிக்கிறோம். கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வரும் நீங்கள் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கழகப் பணிகள் குறித்து நாங்கள் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் கழகத்தின் நன்மைக்கும், கழக உடன்பிறப்புகளின் அரசியல் பயணத்திற்கும் பேருதவி செய்யும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றப் பொதுத் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் கழகம் முழுமையான வெற்றியை ஈட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுமூச்சுடன் மேற்கொண்டு, வெற்றிக் கனியை எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம் என்று நீங்கள் அனைவரும் உறுதி அளித்தமைக்கு, எங்களது மனமார்ந்த நன்றி மீண்டும் உரித்தாகுக. இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து