மலேசிய விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது? ஆஸி. முன்னாள் பிரதமர் கருத்தால் சர்ச்சை

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      உலகம்
Australia ex pm Tony Abbott 2020 02 20

2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி நள்ளிரவு 12.41 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 புறப்பட்டு சென்றது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது. இதையடுத்து அந்த விமானம் மாயமானதாக கருதப்பட்டு, தேடல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. வருட கணக்கில் இந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்த போதும், விமானம் விழுந்த இடம் தெரியவில்லை. இதையடுத்து 2017-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அந்த விமானத்தை தேடும் பணியை நிறுத்தி விடுவதாக ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் கூட்டாக அறிவித்தன.

விமானம்  எங்கு விழுந்தது, எப்படி விபத்துக்குள்ளானது என்பது இன்று வரை மர்மமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், மலேசிய விமானம் எம்.எச் 370 வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது என்று மலேசியா நம்புவதாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி  அப்போட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  மலேசியாவின் எம்.எச் 370 விமானத்தை, அதன் தலைமை விமானி அகமது ஷா வேண்டுமென்றே கடலுக்குள் விழச்செய்ததாக மலேசியாவின் உயர் அதிகாரிகள் கருதினர். யார்? யாரிடம் என்ன சொன்னார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், விமானியின் தற்கொலை மற்றும் கொலை ஆகியவையே இந்த விபத்துக்கு காரணம் என்று மலேசிய அதிகாரிகள் நம்பினர் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் என்றார்.  ஆனால், டோனி அப்போட்டின் இந்த கருத்துக்கு மலேசிய பொது விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து