கொரோனா வைரஸ் பரவலை தடுக்க செவ்வாய் முதல் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்களுக்கு மட்டும் அனுமதி - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

சனிக்கிழமை, 14 மார்ச் 2020      ஆன்மிகம்
Tirupathi 2020 03 14

திருப்பதி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை முதல் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரேனா வைரஸ் பாதிப்பு 85 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகம் கூடும் திருப்பதி, சபரிமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர் வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்பட்டு காத்திருப்பு அறையில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். எனவே, ஏழுமலையான் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் காத்திருக்க கூடிய பூஜைகளான விசேஷ பூஜை ,ஆர்ஜித வசந்தோற்சவம், சகஸ்ர கலசாபிஷேகம் சேவையை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்த சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடாக வி.ஐ.பி. தரிசனம் செய்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக மார்ச் 19 முதல் 21-ம் தேதி வரை ஸ்ரீ ஸ்ரீனிவாசா சாந்தி உற்சவ தன்வந்திரி மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து