முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கும் அமைதி - எதிலும் அமைதி : மக்கள் ஊரடங்கு எதிரொலி - வெறிச்சோடிய தமிழகம் - கடிகாரத்தை தவிர எதுவும் ஓடவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கடிகாரத்தை தவிர வேறுஎதுவுமே நேற்று ஓடவில்லை. அதாவது பஸ்கள், ரயில்கள், ஆட்டோக்கள் என அனைத்துமே நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துபோனது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று காலை 7 மணி முதல் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் சினிமா அரங்குகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள்  என அனைத்துமே மூடப்பட்டிருந்தன.டீக்கடை உள்பட எந்த கடைகளும் நேற்று திறக்கப்படவில்லை.மக்கள் ஊரடங்கு அறிவிப்பை ஏற்று தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

முதல்வர் உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அரசு பஸ்கள் ஓடாது என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆம்னி பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், நீண்டதூர ரெயில்கள் இயக்கமும் நிறுத்தப்பட்டது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டும் நேற்று அடைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. எங்கும் மயான அமைதி நிலவியது. தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. 

டீக்கடைக்கூட இல்லை

சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்பட அனைத்து கடற்கரைகள் அடைக்கப்பட்டன. பொழுதுபோக்கு தலங்களும் மூடப்பட்டன. தமிழகத்தில் ஆட்டோக்கள் மற்றும் லாரிகள்,கால் டாக்சிகளும் ஓடவில்லை. மொத்தத்தில் கடிகாரத்தை தவிர நேற்று எதுவுமே ஓடவில்லை. மக்கள் ஊரடங்கையொட்டி நேற்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரையில் பெரியார் பஸ்நிலையம், மாட்டுத்தாவணி எனப்படும் எம்.ஜி.ஆர்.பஸ்நிலையம், ஆரப்பாளையம் பஸ்நிலையம் ஆகிய பஸ்நிலையங்களுக்கு பஸ்கள் வராததால் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோரிப்பாளையம், காளவாசல் போன்ற பகுதிகள்  வாகனம் ஏதுமின்றி வெறிச்சோடியது. இதே போல் திருச்சி, சேலம்,கோவை, நெல்லை, நாகர்கோவில், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் மக்கள் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.

ஒரு டீக்கடைகூட நேற்று திறக்கப்படவில்லை. இருப்பினும் பால்விநியோகம் நடப்பதை நம்மால் காணமுடிந்தது. கடைகள் மூடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொண்டனர். அதனால் அவர்களுக்கு சிரமம் ஏற்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒருவேளை இது மேற்கொண்டு நீடித்தால் மக்கள் நிலை என்னவாகும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து