மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்: அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு - பிரதமர் மோடி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2020      இந்தியா
PM Modi announced people 2020 03 24

புது டெல்லி : அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் நாடு முழுவதும் (நேற்று) நள்ளிரவு முதல் முடக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனாவை விரட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது,

வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு

எனது வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக கடைப்பிடித்தார்கள். அனைவரும் கொரோனா பரவுதல் விஷயத்தில் மிகுந்த பொறுப்போடு செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போரிட மக்கள் தற்போது ஒன்று திரண்டிருக்கிறார்கள். ஆனாலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சவாலாகவே உள்ளது. கொரோனா பரவும் வழிகளை நாம் உடைத்தெறிய வேண்டும். அதற்கு சமூக தனித்திருத்தலை தவிர வேறு வழியில்லை. சமூக விலகியிருத்தல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியம். அவ்வாறு விலகி இருத்தலை மீறுவது

வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு.

நாடு முழுவதும் ஊரடங்கு

கொரோனா வைரஸை தடுக்க இந்தியாவின் பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்று(நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முடக்கப்படும். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா வைரஸை தடுக்க இந்த முக்கிய நடவடிக்கை அவசியமாகும். இந்தியாவின் அனைத்து பகுதிகளும் இந்த ஊரடங்கிற்குள் கொண்டு வரப்படும்.

21 நாட்கள் நீடிக்கும்

21 நாட்களுக்கு இந்த முடக்கம் தொடரும். இந்த 21 நாட்களிலும் விலகி இருத்தல் மூலம்தான் கொரோனா வைரஸை தடுக்க முடியும். ஆகவே பொதுமக்கள் சங்கடப்படாமல் இதை எதிர்கொள்ளுங்கள். தவறினால் ஒவ்வொரு குடும்பத்தின் அழிவுக்கும் அது வித்திடும். எனவே வீட்டிலேயே இருங்கள். வெளியில் வருவதை பற்றி நினைக்காதீர்கள். குறைந்தபட்சம் 21 நாட்களாவது தனித்து இருப்பது நல்லது. மனித உயிர்களை காக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒரு வாரத்திற்குள் அது நூற்றுக்கணக்கானவர்களை பாதிக்கும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. எனவே லட்சுமணன் கிழித்த கோடு போல கட்டுப்பாடுடன் வீட்டில் இருங்கள். கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்து விடாதீர்கள். மருத்துவத்தில் சிறந்த நாடுகள் கூட அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியா வளர வேண்டுமானால் நீங்கள் தனித்திருப்பது அவசியம். இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் அரசின் அறிவுரையை பின்பற்றவில்லை. அதனால்தான் அங்கு பரவி விட்டது. பொறுமையை கடைபிடிக்க வேண்டிய தருணம் இதுதான். எனவே உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். வீட்டிலேயே இருங்கள். அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கும். அந்த விநியோகத்திற்கு மாநில அரசுகள் ஏற்பாடு செய்யும். ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா தடுப்புக்காக ரூ. 15 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து