முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.4000 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

புதன்கிழமை, 25 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்குங்கள் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பாராட்டியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 22-ம் தேதி மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 24-ம் தேதி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று இரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி இந்த ஊரடங்கு அடுத்த 21 நாட்களுக்கு தொடரும் என்று அதிரடியாக அறிவித்தார். அதன் படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு என்ற வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

கோவிட் 19 எனப்படும் கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்காக தாங்கள் எடுத்து வரும் தீர்க்கமான துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடிய வைரசில் இருந்து இந்தியாவையும், இந்திய மக்களையும் காக்க தாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள். தமிழகமும் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. அதை திறம்பட செயல்படுத்தவும் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அத்தியாவசிய சேவைகள் தொடரவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை ஒழித்துக்கட்ட , தனிமைப்படுத்தும் வசதிகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட தடுப்பு சாதனங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்புக்காக நீங்கள் ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக நாட்டுக்கு ஒதுக்கி இருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றி. தமிழகத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்காக தமிழக அரசு 10 ஆயிரம் படுக்கைகளை ஒதுக்கி உள்ளது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அதை மேம்படுத்தவும் ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அத்தியாவசிய சாதனங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

21 நாட்கள் ஊரடங்கு என்பது பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இதனை உணர்ந்து சமீபத்தில் சில நிவாரண உதவிகளை நான் அறிவித்தேன். 144 தடை அமலில் இருப்பதால் ரூ. 3,280 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை நான் அறிவித்துள்ளேன். குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ரேசனில் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். ஆனால் இந்த நேரத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீடிக்கும் என்று தங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை பாதிக்கும். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பார்கள். அவர்களிடம் சேமிப்பும் குறைவாக இருக்கும். எனவே அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் துயரங்களை சந்திக்க நேரிடும். அவர்களுக்காக தமிழகம் மாதம் ஒன்றுக்கு ரூ. 400 கோடி சம்பளம் ஒதுக்குகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இன்னல் கருதி இந்த ஊழியர்களுக்கு சிறப்பு நிதியாக குறைந்தபட்சம் ரூ. 500 கோடி ஒதுக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இதர அமைப்புசாரா துறையில் 15 லட்சம் ஊழியர்கள் இங்கு உள்ளனர். இவர்கள் இந்த முழு அடைப்பால் இன்னலுக்கு ஆளாக நேரிடும். அதை கருதி அவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. ஆயிரமும், 15 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவர்களுக்கு ஏற்படும் சம்பள இழப்பை கருத்தில் கொண்டு ரூ. 500 கோடி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்க வேண்டியது அவசியம். எனவே இந்திய உணவு கழகத்தில் உணவு தானியங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும். இந்த ஊரடங்கால் பல தொழிற்சாலைகள், வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு, குறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கி கடனை திருப்பி செலுத்துவதை குறைந்தபட்சம் 2 காலாண்டுக்கு மாற்றி அமைக்க வேண்டும். இந்த சிறு, குறு வியாபாரிகளுக்கான வட்டி மற்றும் அபராதத்தை 2 காலாண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். கொரோனாவை தடுக்கும் பொருட்டு தமிழகத்திற்கு அவசர நிதி தேவைப்படுகிறது. ஏழை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த துயரத்தை தீர்க்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும் சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து