முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் வங்கிகள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்கத் தடை: உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதி: கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

தனியார் வங்கிகள், சுய உதவிக் குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை என்றும் உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் நேற்று நடந்த கலெக்டர்களுடான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனுக்குடன் கேட்டறிந்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் நேற்று  காணொலி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழகத்தில் மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட 144 தடை ஏப்.14 வரை தொடரும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை. அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும். மளிகை, காய்கறி, மருந்துப் பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதி. ஆனால் சமைத்த உணவுகளை ஊபர், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் டோர் டெலிவரி செய்ய அனுமதி இல்லை. டோர் டெலிவரி செய்வோர்  அத்தியாவசிய தேவைக்கு என்ற வாசகத்தை ஓட்ட வேண்டும். வாகனங்களில் ஒட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

விவசாய தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்களின் நகர்வு அனுமதிக்கப்படுகிறது. கைரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்படும். கிராமம், நகரங்களில் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து வந்த 54,000 பேரை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது.54,000 பேரின் பட்டியல் மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தடையை மீறி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காசநோய், எச்.ஐ.வி. தொற்று உள்ளோருக்கு 2 மாத மருந்துகளை வழங்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவசர தேவைக்கு 108-ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து