அனைத்து இ.எம்.ஐ.க்களையும், 6 மாதத்திற்கு ஒத்தி வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      இந்தியா
sonia-gandhi 2020 03 26

வங்கி கடன்களுக்காக கட்டப்படும் அனைத்து இ.எம்.ஐ.க்களையும், 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் அவசியம் இன்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கிற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கை வரவேற்று கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;-

காங்கிரஸ் கட்சியின் தலைவராக,  நோய் தொற்றை தடுக்க அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாங்கள் ஆதரவு அளிப்போம். மேலும்,  கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கான புதிய மருத்துவமனைகளை விரைந்து கட்ட வேண்டும். 100 நாள் திட்ட தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், மூடப்படும் ஆலைகளில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி கடன்களுக்காக கட்டப்படும் அனைத்து இ.எம்.ஐ.க்களையும், 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து