கொரோனா நிவாரணம்: முதல்வர் எடப்பாடி அறிவித்த ரூ. 1,000 ஏப். 2-ம் தேதி முதல் வழங்கப்படும்: தமிழக அரசு

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      தமிழகம்
thamilnedu 2020 03 26

Source: provided

சென்னை : ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிவாரணமாக அறிவித்த ரூ. ஆயிரம், நியாய விலைக்கடைகளில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக சட்டசபையில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து, 3,280 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார். அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க இந்நிவாரணம், டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் விநியோகிக்கப்படும். இந்த 1,000ரூபாய் நிவாரணம் மற்றும் விலையில்லாப் பொருட்களை பெற விருப்பம் இல்லாதவர்கள், இதற்கான வலைதளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்கத் தவறியிருப்பின், ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம். 

கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா 1,000 ரூபாயும் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும்.  தற்போது தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை, மாவட்ட கலெக்டர்கள்  மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்றெல்லாம் அறிவித்திருந்தார்.  

அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.1,000 ரூபாயை ஏப்ரல் 2-ம் தேதி முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏப்.15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த தொகையை வழங்கி முடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை கூட்டுறவுத் துறை ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து