முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை தடுக்க ஒரே வழி தனிமைப்படுத்திக் கொள்வதுதான்! அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேவையில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

திங்கட்கிழமை, 30 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனாவை தடுக்க ஒரே வழி தனிமைப்படுத்தி கொள்வதுதான் என்றும் இந்த விஷயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேவையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 11 குழுக்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கொரோனா தொற்று நோய் உலக அளவில் 199 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பேர் பலியாகி இருக்கிறார்கள்.இந்தியாவை பொறுத்தவரை கொரோனா நோய்க்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருவர் பலியாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 50 பேர் கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மேலும் 17 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஈரோடு மாவட்டத்தில் 10 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் என 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. அவர்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

17,869 படுக்கைகள்

தமிழகத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்க 17 ஆயிரத்து 869 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1989 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 420 பேருக்கு 25 நாள் கண்காணிப்பு முடிந்துள்ளது. கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை என்னுடைய தலைமையில் 8 முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு முறையும் தலைமைச் செயலாளர், துறை அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி. உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் போர்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் தலைமைச் செயலாளர் தலைமையில் 4 முறை நடைபெற்றிருக்கிறது. நானும் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தினேன். ஒன்றரை கோடி முக கவசங்கள் வாங்க அரசு ஆர்டர் செய்துள்ளது. அதேபோன்று என்95 என்னும் முகக் கவசங்கள் 25 லட்சம் வாங்கவும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டி உள்ளது. நோய் தடுப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

வெளியூர் செல்ல யாருக்கு அனுமதி?

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரமாக சிலர் வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். எனவே திருமண நிகழ்ச்சி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிக்கு மட்டும் வெளியூர் செல்ல அனுமதி அளிக்கப்படும். இந்த அனுமதியை எப்படி வழங்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்தந்த வட்டாட்சியர்களே அனுமதி வழங்கலாம் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா நோய் எப்படி வருகிறது? எப்படி பரவுகிறது. அதன் ஆபத்து என்ன என்பது பற்றி மக்களிடம் தொடர்ந்து எடுத்து கூறி வருகிறோம். துண்டு பிரசுரங்கள் அச்சடித்தும் தருகிறோம். ஊடகங்கள், பத்திரிக்கைகள் மூலமும் எடுத்து சொல்லி வருகிறோம். பத்திரிகையாளர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா நோய் தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வது தான். கொரோனா பரவலில் தமிழகம் 2-வது கட்டத்தில் இருந்து 3-வது கட்டத்திற்கு செல்லாமல் தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. பாமர மக்களுக்கு இந்த நோயின் ஆபத்து குறித்து மேலும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எத்தனை சட்டம் போட்டாலும் மக்களின் ஒத்துழைப்பு என்பது தான் முக்கியம். மக்களை தண்டிப்பதற்காக சட்டம் அல்ல. ஆனால் அந்த சட்டத்தை மக்கள் மதித்து நடக்க வேண்டும். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. வரலாற்றில் இதுபோன்று நாம் சந்திக்கவே இல்லை. இது ஒரு சவாலான நேரம். படிப்படியாக கொரோனா பாதிப்பை தடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழக மக்கள் ஒத்துழைப்பு மிக நன்றாக உள்ளது.

ரூ.1000 எப்போது?

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொது வினியோக திட்டத்தின் கீழ் எப்படி பொருட்களை விநியோகிப்பது? ரூ.1000 எப்படி வழங்குவது என்று ஆலோசனை நடத்துகிறார்கள். எனவே இதில் தெளிவான முடிவு எடுத்து அறிவிக்கப்படும். நகரம் முதல் கிராம் வரை கொரோனா தொற்று நோய் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது. கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி, பழங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது. டிரைவர்களுக்கும் சானிடைசர் கொடுக்கப்பட்டு பரிசோதனையும் செய்யப்படுகிறது.

அனைத்து கட்சி கூட்டம் தேவை இல்லை

கொரோனா தொற்று நோயை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இது மருத்துவ துறை சம்பந்தப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேவை இல்லை.  வெளிமாநிலங்களில் இருந்து இங்கு பணிபுரிய வந்த தொழிலாளர்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளிகளாக பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் தங்க இருப்பிடம், உணவு அனைத்தும் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். எதற்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறதோ அதனை அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காதால், கொரோனாவுக்கு தற்போது இருப்பது ஒரே தடுப்பு மருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தான். வீட்டு வாடகைதாரர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து