முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பேட்டி

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

வரும் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அம்மா உணவகத்தில் உள்ள உணவை சாப்பிட்டு பார்த்து தரத்தை, சுகாதாரத்தை பரிசோதித்தார். அங்குள்ள சமையல் அறைக்கு சென்று அங்குள்ள உணவு பொருட்களை எல்லாம் பார்வையிட்டு தரத்தை பரிசோதித்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் அவர் அவர் கூறியதாவது:-

அம்மா, ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் உணவு கொடுப்பதற்காக அம்மா உணவகத்தைத் திறந்து வெகு சிறப்பாக இன்றைக்கு தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், அம்மா உணவகத் திட்டம் சிறப்பான திட்டம் என்று அமல்படுத்தியிருக்கிறார்கள். உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நோயால் சுமார் 199 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பல்வேறு மாநிலங்களில் பரவியிருக்கிறது, தமிழகத்திலும் பரவியிருக்கிறது என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவை வருமாறு:-


கேள்வி:- அம்மா உணவகத்தில் வழங்குகின்ற உணவுகளை இலவசமாக கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை இருக்கிறதே?
பதில்:- மலிவு விலையில் தானே உணவு இருக்கிறது. இப்பொழுது ஒரு ரூபாய்க்கு இட்லி தருகிறோம். இந்தியாவிலேயே ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுத்து தமிழ்நாடு, அதற்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டு இருக்கிறது.

கேள்வி:- இப்போதைய சூழ்நிலையில் அம்மா உணவகத்தைத் தான் எல்லோரும் நம்பியிருக்கிறார்கள். இப்பொழுது திறந்திருக்கும் ஓட்டல்களில் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்கிறார்களே?
பதில்:- எவ்வளவு உணவு வேண்டுமென்றாலும் அம்மா உணவகத்தில் கொடுக்கச் சொல்லியிருக்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு நான்கரை லட்சம் பேர் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் உணவு தயாரிப்பதற்கு அரசால் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகத்தின் மூலமாக மக்களுக்கு எளிதாக மலிவான விலையில் உணவு கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற உணவகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்களில் அதிக விலைக்கு உணவுகளை எப்படி விற்க முடியும்? பார்சல் பெறுவோர்கள் பெற்றுக் கொள்ளலாம். உணவகம் எங்கும் திறக்கவில்லை, அப்படி இருந்தால் சொல்லுங்கள், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- இ.எம்.ஐ. வசூல் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டும், வங்கிகளிலிருந்து இ.எம்.ஐ. கட்ட மெசேஜ் வருகிறதே?
பதில்:- நிதித்துறை செயலாளரும், வங்கி உயர் அதிகாரிகளும் பேட்டியே கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தான் வசூல் செய்கிறார்கள், அவர்களே பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதனால், மத்திய நிதி அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு போகிறோம். ஏற்கனவே தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது, மத்திய அரசும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இருந்தாலும், நீங்கள் சொல்வதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்தப்படும்.

கேள்வி:- டெல்லியில் ஜமாத் கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் பங்கு பெற்றார்கள். அதில் கிட்டத்தட்ட 500 பேரை கண்டுபிடித்து விட்டார்கள், மற்றவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
பதில்:-  தமிழக சுகாதாரத் துறை செயலாளர் தனது பேட்டியில் இது குறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார். சுமார் 1500 பேர் அந்த மாநாட்டி-ல் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1331 பேர் என்று கருதுகிறேன், அவர்கள் கலந்து கொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் டெல்லியிலேயே இருக்கிறார்கள். கலந்து கொண்டவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 515 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த சோதனைகளில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் முடிவு வந்திருக்கிறது. அதனால் ஏனைய நபர்கள் தானாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். ஏனென்றால், அவர்களுடைய விலாசம் முழுமையாக கிடைக்கவில்லை. சுகாதாரத் துறை செயலாளர் இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களது குடும்பம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, நாட்டிலுள்ள பலர் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். இந்த நோயினுடைய தாக்கத்தை அறிந்து, தாங்களாக முன்வந்து அரசிற்கு தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். பலர் குணமாகி கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கட்டத்திலேயே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகும் சூழ்நிலை இருக்கிறது. அதைத்தான் நமது சுகாதாரத் துறை செயலாளர் ஊடகம் மற்றும் பத்திரிகையின் வாயிலாக வேண்டுகோளாக வைத்திருக்கிறார்.

கேள்வி:- டெல்லியில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கு பாதிப்பு இருப்பது போலவே 21–ம் தேதி ஈஷாவில் கூட கூட்டம் நடந்திருக்கிறது, பலபேர் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கிறார்கள். ஈஷா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை ஆய்விற்கு உட்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அறிகுறி இருந்தால் வாய்ப்பு இருக்கிறது. அறிகுறி இருக்கின்ற காரணத்தால் இவர்களுக்கு சோதனை நடத்துகிறார்கள், அறிகுறி இல்லாமல் எதையும் சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு மேல் தகவலின் அடிப்படையில் வீடு வீடாக சென்று ஒரு லட்சம் வீடுகளுக்கு மேலாக நம்முடைய அதிகாரிகள் சென்று சோதனை செய்திருக்கின்றார்கள். இதுபோல், இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்கிறோம். அந்த பரிசோதனையில் பாசிடிவ் ஆக வந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம். இது நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இதனடிப்படையில் திருக்கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசாலும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த இடங்களெல்லாம் அதிகமான கூட்டம் கூடுகின்ற இடங்களாகும். அதனால் பலருக்கு இந்த தொற்று வந்துவிடும் என்ற காரணத்தினால் தான் அனைத்து மதம் சார்ந்த கோவில்களும் மூடப்பட வேண்டுமென்று அரசால் உத்தரவிட்டு மூடப்பட்டிருக்கின்றது. நீங்கள் தகவல் சொன்னால் அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.  அதுமட்டுமல்ல, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பட்டியலையும் எடுத்திருக்கிறோம். அவர்கள் வெளிநாட்டவர்களானாலும் சரி, அல்லது தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களானாலும் சரி, அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கேள்வி:- மருத்துவமனைகள் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் உட்பட தனியார்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தை கொடுக்கிறார்கள், அலுவலகத்தை கொடுக்கிறார்கள், அதை பயன்படுத்த அரசு முன்வருமா?
பதில்:- அந்த அளவிற்கு இன்னும் தேவைப்படவில்லை. நாம் 17,000 படுக்கை வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றோம். 17,000 பேர் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யக் கூடிய அளவிற்கு மருத்துவமனைகள் இருக்கின்றன. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகின்ற போது அதையும் நாங்கள் பயன்படுத்தி கொள்வோம்.

கேள்வி:- ஏப்ரல் 14–ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு தொடருமா?
பதில்:- மத்திய அரசு 14–ம் தேதி வரை அறிவித்திருக்கிறது. அதற்குப் பிறகு மத்திய அரசு தான் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றி முடிவு செய்யும்.

கேள்வி:- 144 தடை உத்தரவு முதல் மூன்று நாட்கள் மக்கள் நல்ல முறையில் கடைப்பிடித்தார்கள். தற்போது அந்த கட்டுப்பாடுகள் குறைந்துள்ளதா?
பதில்:- ஊடகமும், பத்திரிக்கையும் தான் சொல்கிறீர்கள். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், மருத்துவமனைகளுக்கு போக முடியவில்லை என்றும் சொல்கிறீர்கள். இப்படி நீங்களே தான் கேள்வியும் கேட்கிறீர்கள், நீங்களே தான் பதிலும் சொல்கிறீர்கள். நாங்கள் என்ன செய்ய முடியும். பொதுமக்களுடைய நலன் கருதி அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கையோடு பொதுமக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, 144 தடை உத்தரவை பிறப்பித்தோம். ஒவ்வொருவடைய உயிரும் மிக முக்கியம். எல்லாருமே இதில் பங்கு கொள்ள வேண்டும். இது தனிப்பட்ட ஒருவருடைய விஷயம் அல்ல. ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், நான் உட்பட, அமைச்சர் ஜெயக்குமார் உட்பட, அனைத்து அதிகாரிகள் உட்பட, பணி செய்கின்ற பணியாளர்கள் உட்பட, ஒட்டுமொத்த மக்களும் இதில் ஒன்று கூடினால் தான் இந்த கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும், பரவுவதை தடுக்க முடியும். தனி ஒருவரால் அல்ல. அரசாங்கம் சட்டம் போடலாம். அந்த சட்டத்தை மதித்து மக்கள் நடக்க வேண்டும். நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சட்டத்தையே போட்டு இருக்கிறோம். இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த நோயின் தாக்கத்தை பற்றி தெரியாமலேயே மக்கள் பரவலாக வெளியே சென்று கொண்டு இருக்கிறார்கள். நோய்வாய்பட்டவர்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றாக தெரியும்.
வெளிநாட்டில் இருக்கின்ற பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலே துடிதுடிக்கின்ற காட்சியை எல்லாம் பார்க்கின்றோம். சுமார் 42 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக ஊடக செய்தியில் பார்த்தோம். இப்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்ற இந்த சூழ்நிலையிலே, அரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம். அதன் அடிப்படையில் தான் 144 தடை உத்தரவை போட்டு இருக்கின்றோம். பிரதமர் மோடியும், இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களில் இருக்கின்ற பொதுமக்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றார். தமிழ்நாடு அரசும், மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், அதேபோல, மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்.
பாதிப்பு எண்ணிக்கை உயருகிறதே?

கேள்வி:- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக ஒரே நாளில் அதிகரித்து இருக்கிறது. ஏப்ரல் 14–ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதற்கான சூழல் இருக்கிறதா?
பதில் :- முதலிலே இதற்கான பதிலை சொல்லிவிட்டேன். மத்திய அரசு தான் முடிவு செய்யும்.

கேள்வி:- சிறு குறு விவசாயிகள் தங்களுடைய விளைச்சலை விற்பனை செய்ய முடியவில்லை, நிறைய வீணாகிறது என்று கூறுகிறார்களே?
பதில்:- விவசாயிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது. அறுவடை செய்யவோ, வேளாண் பணியை மேற்கொள்ளவோ, எவ்வித சிரமமும் இல்லாமல் பணி மேற்கொள்ளலாம் என்று அரசு தெளிவுப்படுத்தி விட்டது. அதேபோல, விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதற்கும் எந்த தடையும் கிடையாது. அதற்கு அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் பாதிப்பு. இந்தியா மட்டுமல்ல, உலகமே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. நம் இந்தியா மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகையே இந்த நோய் அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. இந்த நோயினுடைய தன்மையை கருதி, அந்தந்த நாட்டிற்கு தக்கவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஒருவர் கூட இதனால் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் அரசினுடைய நோக்கம். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து