முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவில் இருந்து பாதுகாக்க மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழக மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கக் கோரி ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று வீடியோ கால் மூலமாக நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க கபசுர கசாயம் குடிக்க வேண்டும் என சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என மனுதாரர் வாதிட்டார். மேலும், கபசுர கசாயத்தின் பலன் குறித்து தற்போது பெரும்பாலானோருக்கு தெரியவந்துள்ளதால், இந்த கசாயம் விற்பனை செய்யப்படும் நாட்டு மருந்து கடைகளை 24 மணி நேரமும் திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும். இந்த கசாயத்தை தயாரிக்க தேவைப்படும் 15 மூலிகைகளை கொண்டு செல்லும் வாகனங்களை காவல்துறையினர் தடுக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார். மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்தை ஆய்வு செய்ய சித்த மருத்துவர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு குறிப்பிட்ட மருந்தை வழங்க வேண்டும் என தங்களால் உத்தரவிட முடியாது என தெரிவித்தனர். மேலும், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக அரசே முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து