முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அதிகமாக இருப்பதாக நம்பப்படும் பகுதிகளில் ரத்தமாதிரி சோதனை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கலாம் என நம்பப்படும் பகுதிகளில் ரத்தமாதிரி சோதனையை அதிக அளவில் நடத்த அரசு முன்வர வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்து உள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக அதிவிரைவு ரத்தமாதிரி சோதனைகளை மாநில அரசுகள் தொடங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு பரிந்துரைத்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலில் இத்தகைய அதிவிரைவு ரத்தமாதிரி சோதனை உடனடி தேவையாகவே தோன்றுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் கடந்த சில நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே பகுதியில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில், ஐயத்திற்கு இடமானவர்கள் அனைவருக்கும் தொண்டைச் சளி எடுத்து நடத்தப்படும் கொரோனா ஆய்வு நடத்துவது சாத்தியமில்லை என்பதால், அதற்கு மாற்றாக  ரத்த மாதிரி சோதனை நடத்தலாம். காய்ச்சல், இருமல், தும்மல், மூச்சுத்திணறல், தொண்டை எரிச்சல் ஆகியவை கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். இவற்றில் 4 அல்லது 5 அறிகுறிகள் இருந்தால் மட்டும் தான் தொண்டைச்சளி எடுத்து ஆய்வு செய்ய முடியும். ஆனால், இரு அறிகுறிகள் இருந்தால் கூட இரத்தமாதிரி சோதனை நடத்த முடியும்.
 
தமிழகத்தில் இப்போது வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ சென்று வந்தவர்கள்,  அவர்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருப்பவர்களுக்கு மட்டும் தான் கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த வரையரைக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க ஆய்வுகளை விரைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு இரத்தமாதிரி சோதனை தான் மிகச்சிறந்த தீர்வாகும்.வழக்கமான தொண்டைச்சளி ஆய்வுடன் ஒப்பிடும் போது இரத்தமாதிரி சோதனை செலவு குறைந்தது ஆகும். அதுமட்டுமின்றி தொண்டைச்சளி ஆய்வு முடிவு தெரிய 5 மணி நேரத்திற்கும் அதிக நேரம் ஆகும் நிலையில், இரத்தமாதிரி ஆய்வு முடிவுகள் இரண்டரை மணி நேரத்தில் வெளியாகி விடும். மேலும் தொண்டைச்சளி ஆய்வை குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டும் தான் செய்ய முடியும். ஆனால், இரத்தமாதிரி ஆய்வை ஏராளமானவர்களுக்கு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கலாம் என நம்பப்படும் பகுதிகளில் ரத்தமாதிரி சோதனையை அதிக அளவில் நடத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து