முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும், இப்பிரச்சினையில் முதல்வர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், எதிர்கட்சித் தலைவர் டுவிட்டரில் விதிமுறைகளின்படி செய்ததைக் குறை கூறியுள்ளார். ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 லட்சம் அந்தந்தத் தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.மேலும், கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயினை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. நோய் தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும், ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய்த் தடுப்பிற்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  மனம் உவந்து நன்கொடை அளிக்க விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 2.4.2020 அன்று வரை, மொத்தம் 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 3.4.2020 முதல் 6.4.2020 வரையிலான நான்கு  நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மெட்ஸ் நிறுவனம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய், கவின் கேர் நிறுவனம் ஒரு கோடி ரூபாய், டெல்பி டி வி எஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாய், டைட்டன் நிறுவனம் ஒரு கோடி ரூபாய், எஸ்.பி.கே அன்டு கோ நிறுவனம் ஒரு கோடி ரூபாய், லூகாஸ் டி.வி.எஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாய், தமிழ்நாடு எஜுகேசனல் அன்டு மெடிக்கல் டிரஸ்ட்  30 லட்சம் ரூபாய், ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் 25 லட்சம் ரூபாய், TAGROS கெமிக்கல் இந்தியா நிறுவனம் 25 லட்சம் ரூபாய், TAG கார்ப்பரேசன் 20 லட்சம் ரூபாய், அம்மா சாரிட்டபில் டிரஸ்ட் 11 லட்சம் ரூபாய், ஹெரிட்டேஜ் புட்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சாப்டீயோன் இந்தியா,  வெங்கடலெட்சுமி பேப்பர் அண்டு போர்டு, டிடிகே கன்ஷ்ட்ரக்ஷன், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன், சுதா ரகுநாதனின் சமுதாயா பவுண்டேஷன், ஆகிய நிறுவனங்கள் தலா 10  லட்சம் ரூபாய் என நிதியுதவி வழங்கியுள்ளனர். மேற்கண்ட நான்கு நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும்.    மேற்படி நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து