முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை? மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், இந்த வழக்கு  குறித்து மத்திய அரசு 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு தங்களுக்கு  உதவ வேண்டும் என்றும், 15-வது நிதிக்கமிஷன் நிதியை ஒதுக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரி வந்தன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் கடந்த 3-ம் தேதி மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கு 11,092 கோடி ஒதுக்குவதாகவும், 15-வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி தமிழகம், ஆந்திரா உட்பட 14 மாநிலங்களுக்கு 6,195 கோடி ஒதுக்குவதாகவும்  அறிவித்தார். மாநில பேரிடர் மேலாண்மை நிதி அறிவிக்கப்பட்டதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரணம், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள  தென்மாநிலங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சரின் அறிவிப்பு படி, மகாராஷ்டிராவுக்கு 1,611 கோடியும், உத்தரபிரதேசத்துக்கு 966 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு 910 கோடியும், பீகாருக்கு 708 கோடியும், ஒடிசாவுக்கு 802 கோடியும், ராஜஸ்தானுக்கு 740.50 கோடியும்,  மேற்குவங்கத்துக்கு 505.50 கோடியும், தமிழகத்துக்கு 510 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு 157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள  டெல்லிக்கு நிதி ஒதுக்கீடே செய்யப்படவில்லை.

இதற்கிடையே, ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று ராஜேந்திரகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள்  கிருபாகரன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ள நிலையில் குறைவான நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.510  கோடி போதுமானதாக இருக்காது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் உறவினர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினர். 144 தடையை மீறி வெளியில் வருபவர்களின்  வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வெளியில் வருபவர்களின் ஓட்டுநர் உரிமங்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் பிரதமரையும், முதல்வரையும் பேச வர சொல்வது ஏற்க முடியாது. மேலும், இந்த வழக்கு  குறித்து மத்திய அரசு 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து