முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு வாபஸ்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா உறுதி

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

மாநிலங்களே முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்தால் கொரோனா பரவாத மாவட்டங்களில் ஊரடங்கு வாபஸ் பெறப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது,

கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மாநில அரசின் அனைத்து வகையான வரி வருவாயும் நின்று விட்டது. ஊரடங்கு உத்தரவை அந்தந்த மாநிலங்களே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் கூறி அனுமதித்தால், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படும். மக்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ளலாம். ஆனால் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு மக்கள் சென்று வர அனுமதிக்க மாட்டோம். கொரோனா பாதித்துள்ள மாவட்டங்களில் ஊரடங்கை வாபஸ் பெற்றால், பெரிய அளவில் அந்த வைரஸ் பரவும். அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் நிதி நிலை சரியாக இல்லை. சில முக்கியமான, தவிர்க்க முடியாத திட்டங்கள் மட்டுமே அமல்படுத்தப்படும். மற்ற திட்டங்கள் அனைத்தும் 5, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் இது தவிர்க்க முடியாத நடவடிக்கை ஆகும். கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரிசெய்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மத்திய, மாநில அளவில் நிதி பற்றாக்குறை உள்ளது. வரி கிடைக்க மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்க அரசு விரும்புகிறது. மது பழக்கம் உள்ளவர்களை கட்டுப்படுத்துவது மிக கடினம். பெங்களூருவில் இன்னும் ஓரிரு நாளில் சில சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கவில்லை. இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். கடந்த மார்ச் மாதத்திற்கான சம்பளத்தை தற்போது செலுத்தி விட்டோம். அடுத்த மாதம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து