முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

வரும் 14-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று  (ஏப்.9) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- ஏப்.14-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
பதில்:- நோயின் தாக்கத்தைப் பொறுத்துதான் முடிவெடுக்க முடியும். கொரோனா தொற்று நோய்ப் பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா இருக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இதுகுறித்து ஆராய 19 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு பணிகளுக்காக 11 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து ஆலோசனை பெற்று வருகிறோம்.

8 லட்சம் தொழிலாளர்களுக்கு நிதி

கேள்வி:- ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதனைச் சமாளிக்க நிதி ஆதாரம் இருக்கிறதா?
பதில்:- மற்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அவ்வாறு செய்யப்படவில்லை. இருக்கும் நிதியை வைத்து பல நிவாரண உதவிகள் அறிவிக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம், கதர் கிராம தொழிலாளர்கள் நல வாரியம், மீனவர் நல வாரியம், மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம், சிறு வியாபாரிகள் நல வாரியம், பூசாரிகள் நல வாரியம், நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம், சீர்மரபினர் நல வாரியம், நரிக்குறவர்கள் நல வாரியம், திரைத்துறை தொழிலாளர் நல வாரியம், உள்ளிட்ட வாரியங்களில் 7 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 1,370 பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் இ.எஸ்.ஐ.-யில் பதிவு பெற்ற ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கும் தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். எல்லாவற்றையும் சேர்த்து 8 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கென 80.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள் குறிப்பாக, களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் எதிர்பாராத விதமாக பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

கேள்வி:- அத்தியாவசியப் பொருட்களின் பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது, அதனைக் கட்டுப்படுத்துவதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலமாக அந்தப் பணியைச் செய்ய ஆணையிடப்பட்டது. அதன் மூலம், தட்டுப்பாடு ஏற்படும் பொருட்கள் கூட்டுறவுத்துறை மூலமாக வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3-ம் கட்டத்திற்கு செல்ல வாய்ப்பு

கேள்வி:- தமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் கட்டத்துக்குச் செல்லுமா?
பதில்:- இரண்டாம் கட்டத்தில்தான் இருக்கிறோம். மூன்றாம் கட்டத்திற்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- ரேண்டம் கிட் வந்தவுடன் யாருக்குப் பரிசோதனை செய்யப்படும்?
பதில்:- நோய்த்தொற்று உறுதியாகியுள்ளவர்களின் குடும்பத்திற்கு முதல் கட்டமாக பரிசோதனை செய்யப்படும். பிறகு, அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் பரிசோதனை
செய்யப்படும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கேள்வி:- குஜராத்தில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:- இந்திய தண்டனைச் சட்டத்தில் அதற்கு இடம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- சில மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:- பொத்தாம் பொதுவாக குற்றம் சொல்லக்கூடாது. மருத்துவர்கள் 6 மணி நேரம் பாதுகாப்பு உடையை போட்டுக் கொண்டு அவர்களால் வெளியில் வர முடியாது. பொதுமக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

கேள்வி:- மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே?
பதில்:- பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். இன்னும் பதில் வரவில்லை.

கேள்வி:- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து குழப்பம் இருக்கிறதே?
பதில்:- தேர்வு எழுதினால்தான் யார் சிறப்பாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும். அதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பரிசீலித்து வருகிறது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து