முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரமடையும் தெலுங்கானா போராட்டம்- 5 பஸ்களுக்கு தீ

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

ஐதராபாத்,பிப்.21 - தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தில் 5 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 

ஆந்திர மாநிலத்தை பிரித்து தனித் தெலுங்கானா உருவாக்கப்பட வேண்டும் என கோரப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆந்திர சட்டசபையில் ஆளுனர் உரை நிகழ்த்தும் போது அவைக்குள் கூச்சல் குழப்பம் நீடித்தது. சட்டப் பேரவைக்கு வெளியே உறுப்பினர்களுக்கு அடி, உதை விழுந்தது. இதைத் தொடர்ந்து தனி மாநிலம் கோரி வருவோர் தெலுங்கானா கூட்டு செயற்குழு அமைத்துள்ளனர். தெலுங்கானா அமைக்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என இந்த கூட்டு செயற்குழு முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளது. 

இந்த குழு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி வருகிறது. சாலை மறியல், வரி கொடாமை, கட்டணம் இன்றி அரசு வாகனங்களில் பயணம் செய்தல் ஆகியவற்றை செய்து வருகின்றனர். தெலுங்கானா பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் தவிர தொழிலாளிகள், ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஊராட்சி அலுவலக  பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. ஐதராபாத்திலும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் வன்முறை வெடித்ததில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் குழுக்களாக சேர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் 5 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். பல்கலை வளாகத்தில் இருந்த போலீஸ் கூடாரங்களுக்கும் தீ வைத்தனர். இருந்தாலும் நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. அக்கிரமக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புதிய சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என அப்பகுதி காவல்துறை இன்ஸ்பெக்டர் அசோக் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்