முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 14 - ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சூசகமாக தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி காட்டுமிராண்டித்தனமாக இனவெறி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்தும் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த தீர்மானம் விவாதத்திற்குப் பின் ஓட்டெடுப்பிற்கு விடப்படும்.  இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை வெற்றிபெறச் செய்ய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று அந்த நாடுகளின் ஆதரவை கோரிவருகிறார். அவ்வாறு ஓட்டெடுப்பு நடக்கும்போது இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளிக்குமா? எதிர்த்து ஓட்டளிக்குமா என்பதை இன்னும் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் இலங்கை இந்த விஷயத்தில் இந்தியா தங்களை ஆதரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஜனாதிபதி உரையிலும் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.  நேற்று மக்களவை கூடியதும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். அனைத்து தமிழக எம்.பி.க்களும் இதனையே வலியுறுத்தினர். லோக்சபையில் இதனால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக எம்.பி.க்களின் ஒட்டுமொத்த கோரிக்கைக்குப் பின் இதுகுறித்து  பேசிய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவாக எந்த நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் இந்தியா ஆதரிப்பதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இதற்கு மேலும் வற்புறத்தினால் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் விளக்கமளிப்பார் என்று மழுப்பலாக தெரிவித்தார்.

பிரணாப் முகர்ஜியின் இந்த விளக்கம் இந்தியாவின் நிலை என்ன என்பதை எடுத்துக்காட்டிவிட்டது. எனவே இலங்கைக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்காது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்