பிரபாகரனின் மகன் சுட்டு கொல்லப்பட வில்லையாம்!

லண்டன், மார்ச் 14 - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனின் மார்பில் மொத்தம் 5 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இதுகுறித்த ஆணித்தரமான ஆதாரம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அப்படியெல்லாம் கொல்லவில்லை என இந்தியாவுக்கான இலங்கைத்தூதர் பிரசாத் காரியவாசம் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் வரலாறு காணாத கொடூரக் கொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அந்தநாட்டின் இனவெறி ராணுவம் அரங்கேற்றியது. இதுதொடர்பான ஆதாரங்கள் பல ஏற்கனவே வெளியாகிவிட்டன. இந்த நிலையில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை கொடூரமாகக் கொலை செய்தது தொடர்பான வீடியோ ஆதாரத்தை சேனல் 4 டி.வி. இன்று வெளியிட உள்ளது. அதில் பாலச்சந்திரனை துப்பாக்கிக்கு மிக அருகாமையில் வைத்து சுட்டுக்கொன்றதற்கான காட்சி தெரிகிறது. இந்த வீடியோ படத்தை காண உலக மக்கள் பதைபதைப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த வீடியோ காட்சிகளை இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவாசம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோ காட்சிகள் உண்மையானதல்ல இட்டுக்கட்டியவை. இது உள்நோக்கம் கொண்ட வீடியோ. பாலச்சந்திரன் இறந்திருக்கலாம். அவன் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. இந்த புகாரை மறுக்கிறோம். போரின்போது 8 ஆயிரம் பேர் இறந்தனர். விடுதலைப் புலிகள் அனைவரும் போரில்தான் இறந்தனர். யாரும் கொலைசெய்யப்படவில்லை என்றார் அவர்.
தற்போது வெளியாக உள்ள வீடியோ இலங்கையின் நன்மதிப்பை கெடுக்கும் முயற்சியாகும் என்றார் காரியவாசம்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, ஐ.நா.வுக்கான மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்துள்ள நிலையில் சேனல் 4 பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட இருப்பது இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல்நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.