முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுதங்களுக்காக செலவு செய்வது வெட்கக் கேடானது

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப்.10 - இந்தியாவும், பாகிஸ்தானும் ஆயுதங்களுக்காக பணத்தை செலவு செய்வது வெட்கக் கேடான ஒன்று என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நேற்று முன்தினம் ஒரு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். அதிபர் சர்தாரியுடன் அவரது மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோவும் உடன் வந்திருந்தார். இருவரும் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் இணைந்து மதிய விருந்து உட்கொண்டனர். பின்னர் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஜ்மீர் தர்ஹாவுக்கு சென்று அங்கு வழிபட்டனர். 

சியாச்சின் பனி மலையில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி பாகிஸ்தானை சேர்ந்த கிட்டத்தட்ட 150 வீரர்கள் இரண்டு தினங்களுக்கு முன் பலியானார்கள். இவர்களுக்காக அதிபர் சர்தாரியும், அவரது மகன் பிலாவலும் ஆஜ்மீர் தர்ஹாவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தனது இந்திய பயணம் குறித்து பிலாவல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவருக்கு இதுவே முதல் இந்திய பயணமாகும். அது பற்றி மிக உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை கூறியிருக்கிறார் பிலாவல். அவர் கூறியிருப்பதாவது, 

இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஏராளமான மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஆயுதங்களுக்காக பணத்தை செலவிடுவது வெட்கக் கேடான ஒன்று. கடுமையான வறுமையில் இரு தரப்பு மக்களும் சிக்கித் தவிக்கிறார்கள். ஆனால் இரு நாடுகளுமே ஆயுதங்கள் மீது தங்கள் பணத்தை செலவிடுகின்றன. இதற்கு பதிலாக கல்வியில் முதலீடு செய்யலாம். வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம். சுகாதாரத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் அப்படி செய்வதை விட்டு விட்டு ஆயுதங்களுக்காக இவர்கள் செலவு செய்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள இரு தரப்பிலுமே அணு ஆயுதங்கள் போதுமானதாக உள்ளது. ஆனால் இது தேவையா? இருவருமே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி கூறிய பிலாவல், தன் தாயார் பெனாசிர் பூட்டோ கூறிய ஒரு மேற்கோளையும் சுட்டிக் காட்டினார். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ராகுலுடன் தாம் அருந்திய மதிய உணவு பற்றி குறிப்பிட்ட அவர், அது ஒரு அருமையான சாப்பாடு என்று குறிப்பிட்டார். இரு தரப்பினருமே சில பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறினார். மொத்தத்தில் இந்திய பயணத்தால் பிலாவல் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். அமைதியை அவர் மனம் நாடுகிறது என்பதை அவரது கருத்துக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்