முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக்., உள்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.10 - இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மே 22 ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சியோலில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சென்றபோது அங்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்து பேசினார். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் கடந்த 8 ம் தேதி இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் சர்தாரியிடம் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார்.  இதற்கு பதிலளித்த சர்தாரி, விரைவில் இந்தியா -பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது இதுகுறித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஏப்ரல் 16 ம் தேதி இருதரப்பு உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியிருந்தார். 

ஆனால் இந்த தேதியில் இந்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பாகிஸ்தான் செல்வது சாத்தியமில்லாத ஒன்று என்றும் அன்றைய தினம் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்து மாநில முதல்வர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற இருப்பதால் அதில் உள்துறை செயலாளர் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் மே 22 ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால் மே 22 ம் தேதிவரை ஆர்.கே.சிங் வேறு எங்கும் செல்ல முடியாது என்றும் மே 22 க்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் இந்தியா பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்