முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானுடன் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல், ஏப். - 14 - ஈரானின் அணு சக்தி விவகாரம் தொடர்பான சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று மீண்டும் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.  ஈரான் அணுசக்தியை ஆக்கபூர்வமான விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட கூடாது என்பது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிலைப்பாடு. இதற்காக ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆற்றலை ஆயுத தயாரிப்புக்கே பயன்படுத்துகிறது என்பதால் போர் மூலமே தீர்வு காண வேண்டும் என்கிறது இஸ்ரேல். ஆனால் ஈரான் மீது உடனே போர் தொடுப்பது அவ்வளவு சரியான நடவடிக்கை அல்ல என்று அமெரிக்கா கருதுகிறது. ஈரானும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவும் விரும்புகிறது. இதனால் ஒரு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி பார்க்க அமெரிக்கா முடிவு செய்தது. இதில் ஈரானின் நட்பு நாடான சீனாவையும் உள்ளடக்கி கொள்ளவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.  போரை தவிர்க்க அணு உலைகளில் குறிப்பிட்ட விழுக்காடு யுரேனிய செறிவூட்டலை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்பே முன் நிபந்தனை எல்லாம் விதிக்க கூடாது என்கிறது ஈரான். இந்நிலையில் துருக்கியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.  அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே துருக்கி மத்தியஸ்தராக இருந்து இந்த பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்துள்ளது. பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இஸ்ரேலோ, ஈரான் மீது போர் தொடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. ஈரானின் அண்டை நாடான அஜர்பைஜானில் ராணுவ தளங்களை இஸ்ரேல் அமைத்திருக்கிறது. இதே போல் ருமேனியா அரசையும் இஸ்ரேல் பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளது. ஈரானின் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடையும் நிலையில் போரை தொடுப்பது என்பது இஸ்ரேலின் நிலை. இருப்பினும் இஸ்ரேல் ஈரான் போரை தவிர்க்க வேண்டும் என்பதே இஸ்ரேலிய யூதர்கள் தரப்பினரின் கருத்தாக உள்ளது. தங்கள் மீது போர் தொடுத்தால் இஸ்ரேல் இல்லாமல் போய் விடும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்