முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர்களிடம் இந்திய எம்.பிக்கள் குறைகேட்பு

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

மாணிக் பண்ணை, ஏப். 20  - இலங்கை வந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் வடக்கு இலங்கை பகுதியில் மாணிக் பண்ணையில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்று அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். நான்கு குழுக்களாக சென்று அனைத்து தரப்பினருடனும் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன் கூறினார். மேலும் முல்லைத் தீவு முகாமில் உள்ளவர்கள் அனைவரையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி. சுதர்சன் தெரிவித்தார். இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வவுனியாவுக்கு வேலைக்கு சென்று திரும்புகின்றனர். சிலர் அங்கேயே தங்கி வார இறுதி நாட்களில் முகாமிற்கு வருவதாக அவர் கூறினார். 

தங்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக சிலர் கூறியதாக டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, முகாம்களில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் அவற்றின் நிறம் குறித்து நாங்கள் ஏதும் முடிவு செய்வதில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு திட்ட அடிப்படையில் வழங்கப்படுவதாக தெரிவித்தனர் என்றும் ரங்கராஜன் தெரிவித்தார். 

வவுனியாவின் வடக்கு பகுதியில் உள்ள புளியங்குளத்தில் வேளாண் விதை பண்ணை ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு நெற் பயிரிடப்பட்டுள்ளதை குழுவினர் பார்த்துள்ளனர். இப்பகுதியில் 15 குடும்பத்தினர் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய நிதி உதவியில் கட்டப்படும் வீடுகளையும் எம்.பிக்கள் குழுவினர் பார்வையிட்டனர். போரினால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தர இந்தியா முன்வந்துள்ளது. இந்த வீடுகள் குறித்து சிலர் அதில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டியதாக சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்தார். இங்குள்ள சமுதாய கூடத்தில் எம்.பிக்கள் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பிக்கள் குழுவினர் அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். இலங்கை பொருளாதார மேம்பாட்டு துறை அமைச்சரும், அதிபரின் சகோதரருமான பாசில் ராஜபக்சே எம்.பிக்கள் குழுவினருடன் புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று அங்குள்ள மக்களிடம் கருத்துக்களை கேட்பதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு குழுவினருடன் அனைத்து பகுதிகளுக்கும் சென்றார். போருக்கு பின்னரும் ராணுவம் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து வருவது மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் துன்பத்தை தருவதாக உள்ளது. முல்லைத் தீவு மற்றும் வன்னியில் ராணுவத்தினரின் தொந்தரவு குறைவாகவே உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது என்று சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்